உள்ளூர் செய்திகள்
நாகராஜன்

திருச்சி மாநகரில் 3000 ஆதரவற்றவர்களின் உடல்களை தகனம் செய்த தூய்மை பணியாளர்

Published On 2022-01-29 06:45 GMT   |   Update On 2022-01-29 06:45 GMT
திருச்சி மாநகரில் 3000 ஆதரவற்றவர்களின் உடல்களை தூய்மை பணியாளர் தகனம் செய்துள்ளார்.
திருச்சி:

திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளராக இருப்பவர் ஏ. நாகராஜன். 49 வயது நிரம்பியுள்ள இவருக்கு திருச்சி அரசு தலைமை ஆஸ்பத்திரியில்  அடையாளம் தெரியாத ஆதரவற்றவர்களின் உடல்களை தகனம் செய்யும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை இன்முகத்துடன் நாகராஜன் நிறைவேற்றி வருகிறார். கடந்த 15 ஆண்டுகளில் அடையாளம் தெரியாத விபத்தில் இறந்தவர்கள், சிக்குன் குனியா, டெங்கு, கொரோனா ஆகிய தொற்றுநோய்களில் மடிந்த 3000 பேரின் உடல்களை கொண்டு சென்று மின்மயானங்களில் தகனம் செய்துள்ளார்.

இதுபற்றி நாகராஜன் கூறும்போது, மக்களுக்கு சேவை செய்ய அரசு ஊழியராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். இந்த வேலை எனக்கு மனநிறைவை தருகிறது. ஆகவே மேற்கண்ட வேலையை தொய்வின்றி, அச்சமின்றி செய்து வருகிறேன் என்கிறார். இவரது அன்றாட வேலையே திருச்சி அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் இருந்தே தொடங்குகிறது.

நாளும் அரசு ஆஸ்பத்திரி காவல்நிலையத்தில் ஆதரவற்றவர்களின் உடல்கள் இருக்கிறதா? என கேட்டறிந்து அதனை ஆம்புலன்சில் ஏற்றி சென்று மின்மயானத்தில் தகனம் செய்துவிடுகிறார். மேலும் நகராஜன் கூறும்போது, இப்போதெல்லாம் கோவிட் தொற்றாளர்களின் உடல்களை தகனம் செய்ய அதிகம் எடுத்து செல்கிறேன். இந்த நேரத்தில் அதிகம் வீட்டின் வெளியே படுத்து தூங்கிவிடுவேன். எப்போதும் குளிக்காமல் வீட்டுக்குள் செல்வதில்லை என்றார். 
Tags:    

Similar News