செய்திகள்
குளத்தில் மூழ்கிய தொழிலாளியை படகில் சென்று தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள்.

வடலூர் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி

Published On 2021-07-15 17:11 GMT   |   Update On 2021-07-15 17:11 GMT
வடலூர் அருகே குளத்தில் மூழ்கி கூலி தொழிலாளி பலியானா சம்பவத்தை குறித்து போலீசார் விசாரணை.
வடலூர்:

கடலூர் அடுத்த திருவந்திபுரம் சாலக்கரை மணவெளி பகுதியை சேர்ந்தவர் கலியன் மகன் சிவபாலன் (வயது 23). கூலி தொழிலாளியான இவர் வடலூரை சேர்ந்த தமிழரசன் என்பவரின் செப்டிக் டேங்க் கிளீனிங் லாரியில் பணிபுரிந்து வந்தார். சிவபாலன் நேற்று முன்தினம் மாலை தன்னுடன் லாரியில் பணிபுரியும் கார்த்திக் என்பவருடன் வடலூர் அடுத்த கருங்குழி கல்லாம்குளம் குளத்துக்கு குளிக்க சென்றார். பின்னர் இருவரும் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்கு சென்ற சிவபாலன் தண்ணீரில் மூழ்கினார்.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திக் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் சிவபாலனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டதோடு, இதுபற்றி வடலூர் போலீஸ் நிலையத்துக்கும், குறிஞ்சி்ப்பாடி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தார். அதன்அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வடலூர் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் ரப்பர் படகு உதவியுடன் குளத்தில் இறங்கி, தண்ணீரில் மூழ்கிய சிவபாலனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பின்னர் இரவு ஆனதும் மீட்பு பணி நிறுத்தப்பட்டது.

அதன்பிறகு நேற்று காலை 10 மணிக்கு குளத்தில் இறங்கிய தீயணைப்புவீரர்கள் போராடி மாலை 5 மணிக்கு சிவபாலனை பிணமாக மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News