செய்திகள்
ஒடி வரும் பள்ளிக்குழந்தைகள்

காஷ்மீர் எல்லையில் பாக். துப்பாக்கிச் சூடு: உயிர் பயத்தில் ஓடி வரும் பள்ளி குழந்தைகள் - பதற வைக்கும் வீடியோ

Published On 2019-09-14 16:12 GMT   |   Update On 2019-09-14 17:17 GMT
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கு பயந்து ஓடி வரும் பள்ளி குழந்தைகளை ராணுவ வீரர் தனது தோளில் சுமந்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.
காஷ்மீர்:

காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட போது பாதுகாப்பு காரணங்களுக்காக சில பகுதிகளில் பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. இதற்கிடையில், நிலைமை சற்று சீரடைந்ததையடுத்து தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் பாலக்கோட் பகுதிக்கு உள்பட்ட சன்டோட்டே கிராமத்தில் உள்ள பள்ளியில் குழந்தைகள் பாடம் பயின்று கொண்டிருந்தனர். அப்போது பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை குறிவைத்து அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதனால் குழந்தைகள் அனைவரும் பயத்தில் செய்வதறியாது திகைத்தனர். 

இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்த இந்திய ராணுவத்தினர் பள்ளிக்குள் சிக்கி தவித்த குழந்தைகளை பத்திரமாக மீட்டனர். பள்ளியில் இருந்து வெளியே வந்த குழந்தைகள் அனைவரும் பாதுகாப்பான இடத்தை நோக்கி வேகமாக ஓடினர். அப்போது துப்பாக்கிச்சூடு நடைபெற்றதால் உயிர் பயத்தில் ஓடி வந்த குழந்தைகள் இருவரை இந்திய ராணுவ வீரர் ஒருவர் தனது தோள்களில் சுமந்தவாறு பத்திரமான இடத்திற்கு கொண்டு சென்றார்.

இதேபோன்று எல்லையில் பாலக்கோட் மற்றும் பிஹ்ருட் கிராமங்களில் உள்ள பள்ளிகளில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூட்டிற்கு பயந்து பள்ளிகளில் தஞ்சமடைந்திருந்த குழந்தைகளை இந்திய ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர்.   

Tags:    

Similar News