செய்திகள்
சென்னை ஐகோர்ட்

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்?- உயர்நீதிமன்றம் கேள்வி

Published On 2020-10-14 11:01 GMT   |   Update On 2020-10-14 11:09 GMT
தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை:

கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. இதனால் இந்த ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை பள்ளி கல்லூரிகள் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பள்ளிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் பிறப்பித்த உத்தரவில், இந்த ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை 40% வசூலித்துக் கொள்ளலாம் எனவும் மீதமுள்ள கட்டணத்தை பள்ளி திறந்தவுடன் பார்த்துக்கொள்ளலாம் என தெரிவித்தது.

ஆனால், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறி சில பள்ளிகள் 100 சதவீதம் கட்டணத்தை வசூலிப்பதாகவும், 40 சதவீத கட்டணத்தை மீறி கட்டணம் கட்ட பெற்றோர்கள் வற்புறுத்தபடுவதாகவும் புகார் கொடுக்கப்பட்டது.

இது தொடர்பாக 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான நோட்டீஸ் சில பள்ளிகளுக்கு சென்றடையதா காரணத்தால், அதற்கான அவகாசம் வழங்கி வழக்கை நவம்பர் 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மேலும், பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் தருமபுரியில் பேட்டி அளித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படாது. ஆந்திராவில் அவசரப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்களுக்கு கொரோனா பரவியதாக அவர் கூறினார்.
Tags:    

Similar News