வழிபாடு
திருப்பதி ஏழுமலையான்

திருப்பதி கோவிலில் குலுக்கல் முறையிலான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளுக்கு முன்பதிவு தொடக்கம்

Published On 2022-03-31 04:47 GMT   |   Update On 2022-03-31 09:01 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு குலுக்கல் முறையிலான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளுக்கு முன் பதிவும், அங்கப்பிரதட்சணமும் தொடங்கியது.
திருமலை :

கொரோனா தொற்று பரவலால் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 20-ந்தேதியில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் (குலுக்கல் முறை) மற்றும் அங்கப்பிரதட்சணை அனுமதி சீட்டு நேரில் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

தற்போது 2 ஆண்டுகளுக்குப் பிறகு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் மூலம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் நடைமுறையை மீண்டும் தொடங்கி உள்ளது.

பக்தர்கள் பல்வேறு ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளுக்கு திருமலையில் உள்ள ஆர்ஜித சேவை கவுண்ட்டர்களில் காலை 11 மணியில் இருந்து மாலை 5 மணி வரை முன்பதிவு செய்யலாம். அங்கு அவர்களுக்கு 2 ஒப்புகை சீட்டுகள் வழங்கப்படும். அதில் ஒரு சீட்டு பக்தருக்கும், மற்றொரு சீட்டு கவுண்ட்டர் பைல் காப்பியாக அதிகாரிகளின் பரிசீலனைக்கும் ஏற்கப்படும்.

பக்தருக்கு வழங்கப்படும் ஒப்புகை சீட்டில் சம்பந்தப்பட்ட பக்தரின் பதிவு எண், சேவை தேதி, தனிப்பட்ட பெயர், மொபைல் எண் போன்றவை குறிப்பிடப்பட்டு இருக்கும். பதிவு செய்த பக்தர்கள் முன்னிலையில் அகண்ட எல்.இ.டி. திரையில் முதல் குலுக்கலில் (டிப்) தானியங்கி தர வரிசை அடிப்படையில் மாலை 6 மணிக்கு நம்பர் ஒதுக்கப்படும். பக்தர்கள் எந்தெந்த சேவை டிக்கெட்டுகள் கேட்டுள்ளார்களோ அதற்கு தகுந்தாற்போல் நம்பர் ஒதுக்கப்படும்.

பொதுவாக, வெள்ளிக்கிழமை அன்று முன்பதிவு செய்யும் டிக்கெட்டுகளை பக்தர்கள், வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு ஆர்ஜித சேவை அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும். யாரேனும், அவ்வாறு செய்யவில்லை என்றால், இரண்டாவது முறையாக இரவு 8.30 மணிக்கு இயங்கும் குலுக்கல் முறைக்கான தற்போதைய முன்பதிவுக்கு டிக்கெட்டுகள் கரண்ட் புக்கிங் விடப்படும்.

குலுக்கல் முறையில் ஆர்ஜித சேவை டிக்கெட் பெற்ற பக்தர்கள், அவற்றை வாங்குவதற்கு இரவு 11 மணிக்குள் அவர்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிக்கப்படும். டிக்கெட் கிடைக்காதவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலமாகவும் தெரிவிக்கப்படும். குலுக்கல் முறை செயல்பாட்டில் பக்தர்கள் ஒரு வாய்ப்பைப் பெறுவதற்காக தனியங்கி எலிமினேஷன் செயல்முறை செயல்படுத்தப்படுகிறது.

பக்தர்கள் குலுக்கல் முறையில் ஆர்ஜித சேவைகளில் ஏதேனும் ஒன்றைப் பெற்றிருந்தால், ஆறு மாதங்கள் வரை எந்தவொரு சேவையையும் பெற அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஒரு ஆர்ஜித சேவைக்கு மட்டுமே பக்தர்கள் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

ஆர்ஜித சேவை பதிவுக்கு ஆதார் கட்டாயம். இருப்பினும் வெளிநாடு வாழ் பக்தர்கள் (என்.ஆர்.ஐ) தங்களின் பாஸ்போர்ட்டை காண்பிக்க வேண்டும். பக்தர்கள் அசல் புகைப்படம், அசல் அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும்.

புதிதாக திருமணம் செய்தவர்கள் கல்யாண உற்சவ டிக்கெட்டுக்கு முன்பதிவு செய்யலாம். அதற்கு திருமண அழைப்பிதழ் மற்றும் அசல் புகைப்பட அடையாள அட்டையை சமர்ப்பித்தால், புதுமணத் தம்பதிகளுக்கு ஒதுக்கீட்டின்படி கல்யாண உற்சவ டிக்கெட்டுகள் வழங்கப்படும். திருமணம் முடிந்து 7 நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் டிக்கெட்டுகள் ஒதுக்கப்படுகின்றன.

இன்று (வியாழக்கிழமை) முதல் ஏழுமலையான் கோவிலில் அங்கப்பிரதட்சண டோக்கன்கள் வழங்கப்படுகிறது. திருமலையில் உள்ள பி.ஏ.சி-1ல் உள்ள இரு கவுண்ட்டர்களில் தினமும் 750 டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.

வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில் மூலவர் ஏழுமலையானுக்கு அபிஷேகம் நடப்பதால் பக்தர்கள் தரிசனம் இன்றி அங்கப்பிரதட்சணத்துக்கு மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். நாளை (வெள்ளிக்கிழமை) அபிஷேகம் நடப்பதால் பக்தர்களுக்கு அங்கப்பிரதட்சணை செய்ய மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதை, பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறினார்.

இதையும் படிக்கலாம்...பங்குனி மாத அமாவாசை விரதமும்...பலன்களும்...
Tags:    

Similar News