செய்திகள்
பிளாஸ்மா சிகிச்சை

கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையால் பெரிதாக பலன் இருக்காது- விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டுபிடிப்பு

Published On 2020-10-24 03:51 GMT   |   Update On 2020-10-24 03:51 GMT
பிளாஸ்மா சிகிச்சையால் கொரோனா நோயாளிகளுக்கு பெரிதாக பலன் இருக்காது என்று விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை முறைகளில் பிளாஸ்மா சிகிச்சை முறையும் ஒன்றாகும். கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும்.

அதனால் அவர்களது ரத்தத்தில் இருந்து எடுக்கப்பட்ட பிளாஸ்மாவை பயன்படுத்தி, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஆனால், இந்த சிகிச்சை முறை குறித்து இருவேறு கருத்துகள் நிலவி வருகின்றன.

இந்த நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தமிழ்நாட்டில் உள்ள தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் உள்ளிட்டவற்றை சேர்ந்த விஞ்ஞானிகள், இந்தியாவில் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

இதற்காக, கடந்த ஏப்ரல் முதல் ஜூலை மாதம்வரை இந்தியாவில் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்ட 464 கொரோனா நோயாளிகளை ஆய்வுக்கு பயன்படுத்தினர்.

இவர்களில், 239 பேருக்கு 24 மணி நேர இடைவெளியில் தலா 200 மி.லி. வீதம் 2 தடவை பிளாஸ்மா செலுத்தப்பட்டது. ஆனால், மீதி 225 பேருக்கு பிளாஸ்மா செலுத்தாமல் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஒரு மாதம் கழித்த பிறகு, பிளாஸ்மா சிகிச்சை பெற்றவர்களில் 44 பேருக்கு நோய் தீவிரம் ஆகாமல் குறைந்தது. பிளாஸ்மா செலுத்தப்படாதவர்களில், 41 பேருக்கு நோய் தீவிரம் தடுக்கப்பட்டது.

எனவே, பிளாஸ்மா சிகிச்சையால், குறைவான பலனே கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது.

அதே சமயத்தில், பிளாஸ்மா சிகிச்சையால், 7 நாட்களுக்கு பிறகு, மூச்சுத்திணறல், உடல் சோர்வு போன்ற கொரோனா அறிகுறிகள் குறைவது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு முடிவுகள், இங்கிலாந்து மருத்துவ பத்திரிகை ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளன.
Tags:    

Similar News