ஆன்மிகம்
ராவணாசூர வாகனம் தூசு தட்டி சீரமைக்கும் பணி நடந்தபோது எடுத்தபடம்.

ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் மகா சிவராத்திரி: உள்ளூர் பக்தர்களுக்கு முன்கூட்டியே ரூ.200 டிக்கெட்டுகள் வழங்க ஏற்பாடு

Published On 2021-03-02 08:02 GMT   |   Update On 2021-03-02 08:02 GMT
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடப்பதையொட்டி மின் விளக்கு அலங்காரம் செய்யப்படுகிறது. வாகனங்கள் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. உள்ளூர் பக்தர்களுக்கு முன்கூட்டிேய ரூ.200 டிக்கெட்டுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் பிரசித்திப் பெற்றதாகும். அந்தக் கோவிலை தென் கயிலாயம் என்றும் பக்தர்கள் அழைப்பர். ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் வாயு தலமாக திகழ்கிறது. ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரணப் பூஜை செய்ய உகந்த தலமாக விளங்குகிறது.

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடக்கும். அதேபோல் இந்த ஆண்டுக்கான மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா 6-ந்தேதி தொடங்கி 19-ந்தேதி வரை 14 நாட்கள் வெகு விமரிசையாக நடக்க உள்ளது.

அதற்காக கோவிலில் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் நடந்து வருகிறது. கோவில் உள்ளே, வெளியே நடக்கும் வீதிஉலாவின்போது பயன்படுத்தப்படும் வாகனங்களை சீரமைத்து வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது.

கோவிலை சுற்றி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. பக்தர்களுக்கு உதவி செய்ய தகவல் மையம், காவல் உதவி மையம் ஆகியவை அமைக்கப்படுகிறது. கோவில் அருகில் நாட்டிய, நடன, பக்தி இசை, சொற்பொழிவு ஆகிய நிகழ்ச்சிகளை நடத்த தூர்ஜெட்டி கலையரங்கம் சீர் செய்யப்பட்டுள்ளது. பக்த கண்ணப்பர் கொடியேற்றத்தையொட்டி கண்ணப்பர் கோவிலுக்கும் வர்ணம் பூசும் பணி நடக்கிறது.

இந்தநிலையில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்புப் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கங்காசதர்ன் விடுதியில் நடந்தது. கூட்டத்தில் பியப்பு.மதுசூதன்ரெட்டி எம்.எல்.ஏ. பங்கேற்று பேசியதாவது:-

வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்கும் நேரத்தில் நகரில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். திருப்பதி, நெல்லூர், சென்னை ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். ரெயில் நிலையம், பஸ் நிலையத்தில் இருந்து ஒவ்வொரு 5 நிமிடத்துக்கும் கோவிலுக்குச் சொந்தமான இலவச பஸ்சை இயக்க வேண்டும்.

மகா சிவராத்திரிக்கு 2 நாட்களுக்கு முன்பே உள்ளூர் பக்தர்களுக்கு ரூ.200 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும். சாமி-அம்பாள் திருக்கல்யாண உற்சவத்தின்போது, ஸ்ரீகாளஹஸ்தி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் குழந்தை திருமணம் நடக்காமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு எம்.எல்.ஏ. ேபசினார்.

கூட்டத்தில் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு, செயற்பொறியாளர் (பொறுப்பு) வெங்கட்நாராயணா, துணை பொறியாளர் முரளிதர், துணை போலீஸ் சூப்பிரண்டு விஸ்வநாத் மற்றும் அனைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News