செய்திகள்
திருப்தி தேசாய்

சீரடி கோவிலுக்கு தடையை மீறி செல்ல முயன்ற திருப்தி தேசாய் கைது

Published On 2020-12-11 02:08 GMT   |   Update On 2020-12-11 02:08 GMT
பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட ஆடை கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தடையை மீறி சீரடி கோவிலுக்கு செல்ல முயற்சித்த திருப்தி தேசாய் கைது செய்யப்பட்டார்.
மும்பை :

மராட்டிய மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள உலக புகழ் பெற்ற சீரடி சாய்பாபா கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிலர் அநாகரிக ஆடை அணிந்து வருவதாக வந்த புகாரின் பேரில் கோவில் வளாகத்தில் அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டது. அதில், நாகரிக அல்லது இந்திய பாரம்பரிய உடை அணிந்து வந்து சாய்பாபாவை தரிசனம் செய்யுமாறு கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்தது.

இதற்கு மராட்டியத்தை சேர்ந்த ‘பூமாதா பிரிகேட்’ என்ற பெண்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. அந்த அமைப்பின் தலைவி திருப்தி தேசாய், கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ள அறிவிப்பு பலகையை அகற்றாவிட்டால் 10-ந்தேதி நானே நேரில் வந்து பலகையை அகற்றுவேன் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து அவர் இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு வரை சீரடி நகருக்குள் நுழைய தடை விதித்து உதவி கலெக்டர் கோவிந்த் ஷிண்டே உத்தரவிட்டு இருந்தார்.

ஆனால் தடையை மீறி திருப்தி தேசாய் நேற்று தனது ஆதரவாளர்களுடன் புனேயில் இருந்து வாகனத்தில் புறப்பட்டு சென்றார். இதனால் பரபரப்பு ஏற்படவே, புனே-அகமது நகர் நெடுஞ்சாலை சுபா கிராமம் அருகே அவரையும், அவரது ஆதரவாளர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

பின்னர் தடையை மீறியதாக திருப்தி தேசாய் உள்பட 16 பேரை கைது செய்தனர். இதனால் தடையை மீறி அவர்கள் சீரடி கோவிலுக்குள் நுழையும் முயற்சியை போலீசார் முறியடித்தனர்.

அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று பூமாதா பிரிகேட் அமைப்பினர் போராடி வருகின்றனர். ஏற்கனவே சபரிமலை கோவிலுக்கு நுழையும் முயற்சியாக செல்லும் வழியில் திருப்தி தேசாய் தடுத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News