வழிபாடு
கோவில் முன் சுவாமி அம்பாள் எழுந்தருளியதை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் மகாசிவராத்திரி விழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2022-03-02 02:35 GMT   |   Update On 2022-03-02 02:35 GMT
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மகாசிவராத்திரியையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய சாமி தரிசனம் செய்தனர்.
உலக பிரசித்திப் பெற்ற வாயுலிங்கமாகத் திகழும் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி முதன்மையான விழாவாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவ விழாவும் நடைபெற்று வருகிறது. இதனால் மகாசிவராத்திரியின்போது ஸ்ரீகாளஹஸ்தி நகரம் விழாக்கோலத்துடன் காணப்படும்.

அதன்படி தற்போது ஸ்ரீகாளஹஸ்தியில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மகாசிவராத்திரி தினமான நேற்று அதிகாலை 2 மணிக்கு மங்கள வாத்தியங்கள், மேளதாளங்கள் முழங்க பவித்ர மந்திரங்களுடன் அர்ச்சகர்கள் கோவில் நடையை திறந்து வைத்தனர்.

பின்னர் கோபூஜை நடத்தப்பட்டு பவித்ர ஸ்நானம் செய்த பசு, ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் தரிசனம் செய்தது.

அதன் பின்னர் பக்தர்களை சர்வ தரிசனத்திற்கு அதிகாரிகள் அனுமதித்தனர். காலை 5 மணியில் இருந்து சுவாமி, அம்பாளுக்கு கோவில் அர்ச்சகர்கள் சாஸ்திர பூர்வமாக அபிஷேகங்களை நடத்தினர்.

ருத்ராபிஷேகம் உட்பட இளநீர், பச்சைக்கற்பூரம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சுவாமிக்கு வரிசையாக அபிஷேகம் செய்தனர். இந்த அபிஷேகங்களுடன் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் ஞானபிரசுனாம்பிகை தாயார் தன்னுடைய பக்தர்களுக்கு நித்திய அபிஷேகர் மூர்த்தியாக தரிசன பாக்கியத்தை ஏற்படுத்தினார்.

மகா சிவராத்திரி தினத்தையொட்டி ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் முழுவதும் சிவ நாம மந்திரங்கள் முழங்கியவாறு இருந்தது. நேரம் செல்லச்செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருந்தது.

பக்தர்கள் வசதியைக் கருத்தில் கொண்டு கோவில் அதிகாரிகள் கூடுதல் சிறப்பு வரிசைகளை ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன டிக்கட் வாங்கியவர்களுக்கு தெற்கு கோபுரம் வழியாக சாமி தரிசனத்துக்கு அனுமதித்தனர்.

வி.ஐ.பி.க்களுக்கு தனி நேரத்தை ஒதுக்கினர். இலவச தரிசன வரிசைகள், சிறப்பு தரிசன வரிசைகள் இரண்டும் ஒன்று சேராமல் வெவ்வேறு வழிகளை ஏற்பாடு செய்திருந்தனர். இதனால் பக்தர்களுக்கு எந்தவித இடையூறுமின்றி சாமி தரிசனம் செய்யும் வாய்ப்பு பக்தர்களுக்கு ஏற்படுத்தினர்.

இந்த ஆண்டும் மகா லகு தரிசனம் ஏற்பாடு செய்ததால் பக்தர்கள் நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திராமல் சாமி தரிசனம் செய்ய முடிந்தது.

தரிசனத்திற்கு பின்னர் பக்தர்கள் வெளியே வருவதற்காக ஸ்படிக லிங்கம் அருகில் சிறப்பு வழியை தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. விடிய விடிய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இதனிடையே காலை பதினோரு மணிக்கு ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் இந்திர விமான வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஞானபிரசுனாம்பிகை தாயார் சப்பரத்தில் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து காட்சியளித்தார். மூஷிக வாகனத்தில் விநாயகரும், வள்ளி தேவயானை சமேத சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், கண்ணப்பர் தனித்தனி சப்பரங்களில் காட்சியளித்தனர்.

பக்தர்கள் வழிநெடுகிலும் கற்பூர ஆரத்தி சமர்ப்பித்துசாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் இரவு, நந்தி வாகனத்தில் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரும், சிம்ம வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி விமர்சையாக ஊர்வலம் நடந்தது.

முன்னதாக கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் சுவாமி அம்பாளுக்கு தங்க ஆபரணங்களோடு பட்டு வஸ்திரங்களால் அலங்காரம் செய்யப்பட்டது.

வீதி உலாவின்போது மேளதாளங்கள் மங்கல வாத்தியங்கள் முழங்கியதோடு பஜனைகள், கோலாட்டங்களுடன் பொய்க்கால் குதிரை பல்வேறு பக்தர்கள் வேடமணிந்து நடனமாடியவாறு வந்தனர்.
Tags:    

Similar News