செய்திகள்
பிரியங்கா காந்தி

போலீஸ் கஸ்டடியில் ஒருவர் பலி- குடும்பத்தினரை சந்திக்க சென்ற பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தம்

Published On 2021-10-20 10:29 GMT   |   Update On 2021-10-20 15:59 GMT
இறந்துபோன துப்புரவு தொழிலாளியின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆக்ரா நோக்கி சென்றார்.
ஆக்ரா:

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள காவல் நிலைய குடோனில் 25 லட்சம் ரூபாய் திருட்டு போனது. அப்போது பணியில் இருந்த காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பணம் திருட்டு தொடர்பாக துப்புரவு தொழிலாளியை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த அந்த தொழிலாளி பணம் திருடியது தெரியவந்தது. 

இதையடுத்து அவர் பதுக்கி வைத்திருந்த இடத்தில் இருந்து 15 லட்சம் ரூபாயை இன்று மீட்டனர். அப்போது, அந்த துப்புரவு தொழிலாளிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் திடீரென உயிரிழந்துவிட்டார். போலீசார் அடித்துக் கொன்றுவிட்டதாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இறந்துபோன துப்புரவு தொழிலாளியின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, இன்று மதியம் ஆக்ரா நோக்கி சென்றார். அப்போது அவரை லக்னோ-ஆக்ரா எக்ஸ்பிரஸ் சாலையின் முதல் டோல்கேட்டில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

காவல் துறையின் இந்த நடவடிக்கைக்கு பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். கட்சி அலுவலகத்தைத் தவிர வேறு எந்த இடத்திற்கு சென்றாலும் தடுக்கிறார்கள். இது பொதுமக்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. அரசாங்கம் எதற்கு பயப்படுகிறது? என பிரியங்கா கேள்வி எழுப்பினார்.

ஆனால், உரிய அனுமதி இல்லாமல் வந்ததால் பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதாக உத்தர பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது. 

அதன்பின்னர் பிரியங்கா காந்தி மற்றும் அவருடன் 3 நபர்களை மட்டும் ஆக்ரா சென்று, இறந்துபோன துப்புரவு தொழிலாளியின் குடும்பத்தினரை சந்திக்க காவல்துறை அனுமதி அளித்தது. 
Tags:    

Similar News