ஆன்மிகம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவில்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்

Published On 2020-11-17 09:30 GMT   |   Update On 2020-11-17 09:30 GMT
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா வருகிற 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 29-ந்தேதி மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருவிழாவையொட்டி தினமும் காலையிலும், இரவிலுமாக பல்வேறு வெவ்வேறு வாகனங்களில் தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி எழுந்தருளி நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதும் வழக்கமாகும். ஆனால் இந்த ஆண்டு முதல் முறையாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் சுவாமி புறப்பாடு நகர் வீதிகளில் உலா வருவது தவிர்க்கப்பட்டுள்ளது. அதே சமயம் சுவாமி புறப்பாடு நிகழ்வுகள் அனைத்தும் கோவிலுக்குள் உள்ள திருவாட்சி மண்டபத்தில் நடைபெறுகிறது.

இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீப திருவிழா வருகிற 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரைநடக்கிறது. திருவிழாவின் முதல் நாளான 21-ந்தேதி (சனிக்கிழமை) காலை 7.15 மணியில் இருந்து 7.45 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. திருவிழாவில் 28-ந்தேதி(சனிக்கிழமை) இரவு 6.30 மணியளவில் பட்டாபிஷேகம், 29-ந்தேதி மாலை 6 மணியளவில் மலையில் உச்சிப்பிள்ளையார்கோவில் வளாகத்தில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இந்த நிகழ்வில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. 30-ந்தேதி தீர்த்த உற்சவம் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனரும், தக்கருமான செல்லத்துரை, துணை கமிஷனர்(பொறுப்பு) ராமசாமி மற்றும் கோவில் சிவாச்சாரியார்கள் செய்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 15-ந்தேதி சுவாமிக்கு காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் இறுதி நாளான வருகிற 21-ந்தேதி மாலையில் பாவாடை தரிசனம் நடக்கிறது. இதேநாளில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிறது. ஆகவே ஒரே நாளில் கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவும், கார்த்திகை தீபத் திருவிழாவின் தொடக்கமும் நடைபெறுவது விசேஷத்திலும் விசேஷமாக கருதப்படுகிறது.
Tags:    

Similar News