செய்திகள்
கோப்புபடம்

கூடலூரில் 3 கடைகளில் தீ விபத்து

Published On 2020-11-09 15:12 GMT   |   Update On 2020-11-09 15:12 GMT
கூடலூரில் 3 கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடலூர்:

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர். நகரில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல வியாபாரிகள் தங்களது கடைகளை அடைத்துவிட்டு சென்றனர். அப்போது நள்ளிரவு அதே பகுதியில் அடுத்தடுத்து உள்ள 3 கடைகளில் திடீரென தீ பிடித்தது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் புகை மூட்டமாக இருந்தது.

இதை அறிந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து பார்த்தனர். அப்போது வாகனங்களுக்கு பெயிண்டிங் செய்யும் ஒர்க் ஷாப் மற்றும் வீட்டு உபயோக பர்னிச்சர் பொருட்கள் செய்யும் கடை, துணி பை தயாரிக்கும் மற்றொரு கடை ஆகியவை கொழுந்துவிட்டு எரிந்து கொண்டு இருந்தது.

இது குறித்த தகவலின்பேரில் போலீசார், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கடைகளுக்குள் எந்திரங்கள் மற்றும் எளிதில் தீ பரவக்கூடிய பிளாஸ்டிக் பொருள்கள், துணிப்பைகள் இருந்ததால் தீயை உடனடியாக அணைக்க முடியவில்லை. எனினும் தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் அதன் உள்ளே இருந்த எந்திரங்கள், பர்னிச்சர்கள், துணிப்பைகள் தயாரிப்பதற்கான தளவாடங்கள் உள்பட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட் கள் எரிந்து நாசமானது. தீ விபத்து எப்படி நடந்தது என்பது தெரியவில்லை.

இது குறித்து கூடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News