உள்ளூர் செய்திகள்
திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்ட காட்சி

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியில் மீண்டும் மழை

Published On 2022-04-17 04:55 GMT   |   Update On 2022-04-17 04:55 GMT
மலையோர பகுதிகளிலும் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நாகர்கோவில்:

குமரி மாவட்டம் முழுவதும் கடந்த இரு வாரங்களாக பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக வெப்பம் தணிந்து இதமான குளிர் காற்று வீசுகிறது.

கடந்த இரண்டு நாட்களாக மழை சற்று குறைந்திருந்த நிலையில் நேற்று இரவு அணை பகுதிகளில் மழை மீண்டும் பெய்துள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக 21.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மலையோர பகுதிகளிலும் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணைகளில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் சாரல் மழையின் காரணமாக அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இன்று குவிந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்தக் குளியல் இட்டு மகிழ்ந்தனர்.

நாகர்கோவிலில் இன்று காலையிலும் சாரல் மழை பெய்தது. ஆரல்வாய்மொழி, தக்கலை, சுங்கான்கடை பகுதிகளிலும் இன்று காலை மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மழை நீடித்தது. பேச்சிப்பாறை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 39 அடியாக இருந்தது. அணைக்கு 263 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 888 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 30.48 அடியாக உள்ளது. அணைக்கு 72 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

சிற்றார்-1 அணை நீர்மட்டம் 9.32 அடியாகவும், சிற்றார்-2 அணை நீர்மட்டம் 9.40 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 19.30 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 6.07அடியாகவும் உள்ளது.

மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பேச்சிப்பாறை 5.8, பெருஞ்சாணி 8.4, தக்கலை 1.3, ஆணைக்கிடங்கு 2.2, மாம்பழத்துறையாறு 2.2 , பாலமோர் 21.2, இரணியல் 3.2, புத்தன் அணை 7.2.

Tags:    

Similar News