செய்திகள்
கேஎஸ் அழகிரி

தமிழக நலனுக்கு எதிராக பா.ஜனதா கருத்து கூறுவதா?- கேஎஸ் அழகிரி கண்டனம்

Published On 2021-07-05 05:48 GMT   |   Update On 2021-07-05 06:42 GMT
காவிரி நீரை பொறுத்த மட்டில் அதனை வீணாக்குவது என்பது தமிழகம் தான். இதில் நீர் பங்கீட்டை கர்நாடகா சரியாகத் தான் வழங்குகிறது. கடந்த 2 வருடங்களாகத் தமிழகத்திற்கு வரும் காவிரி நீர் வீணாகக் கடலில் கலந்து வருகிறது.

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மத்திய பா.ஜ.க. அரசு கடந்த 7 ஆண்டு காலமாக தமிழக மக்களின் நலனுக்கு விரோதமாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் 20 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் மட்டுமே வெற்றிவாய்ப்பைப் பெற்ற பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.

அந்த சந்திப்பு குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் பத்திரிகையாளர்களுடன் பேசுகையில், “காவிரி நீரை பொறுத்த மட்டில் அதனை வீணாக்குவது என்பது தமிழகம் தான். இதில் நீர் பங்கீட்டை கர்நாடகா சரியாகத் தான் வழங்குகிறது. கடந்த 2 வருடங்களாகத் தமிழகத்திற்கு வரும் காவிரி நீர் வீணாகக் கடலில் கலந்து வருகிறது.

 


குறிப்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வந்த பிறகு முறையாகத் தமிழகத்திற்குத் தண்ணீர் பிரச்சினை இல்லாமல் கிடைத்து வருகிறது” என்று ஆதாரமற்ற கருத்தை, முழு பூசனிக்காயைச் சோற்றில் மறைக்கிற வகையில் பேசியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

பற்றாக்குறை காலங்களான ஜூன், ஜூலை மாதங்களில் தர வேண்டிய தண்ணீரைத் தராமல் கடுமையான மழைப்பொழிவு இருக்கிற காலங்களில் தண்ணீரைத் திறந்துவிட்டு தமிழகத்தை வடிகாலாகக் கர்நாடக அரசு கருதுவதை எவரும் ஏற்றுக்கொள்ள முடியாது.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமாக கிருஷ்ணராஜ சாகர் , கபினி அணைகளுக்கு கீழே மேகதாதுவில் ரூ.6,000 கோடி செலவில் 70 டி.எம்.சி. நீரை தேக்கி வைக்கிற அளவுக்கு அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கர்நாடக அரசு அனுமதி கோரியிருக்கிறது.

இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது. மேகதாதுவில் அணை கட்டப்படுமேயானால் காவிரிப்படுகை வறண்ட பாலை வனமாக மாறுவதற்கு வழிகோலும் என எச்சரிக்க விரும்புகிறேன்.

கடந்த 3 ஆண்டுகளாக காவிரி மேலாண்மை வாரியத்திற்கு முழுநேர தலைவரை நியமிக்காமல் மத்திய நீர்வளத்துறை செயலாளரை இதன் தலைவராக செயல்பட கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பிற்கான செலவை மாநில அரசுகள் தான் பகிர்ந்து கொள்கின்றன.

ஆனால் காவிரி நீரை நியாயமாக பகிர்ந்து கொள்வதைக் கண்காணிக்கிற காவிரி மேலாண்மை வாரியத்திற்கு முழு நேரத் தலைவரைக்கூட கடந்த 3 ஆண்டுகளாக நியமிக்காமல் மிகுந்த அலட்சியப் போக்குடன் மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது.

பா.ஜனதாவின் குற்றச்சாட்டு 10 ஆண்டு ஆட்சிக்கு பொருந்துமே தவிர, அறுபது நாள் கூட நிறைவு பெறாத தி.மு.க. ஆட்சிக்கு பொருந்தாது. இத்தகைய குற்றச்சாட்டை தமிழக பா.ஜ.க. தலைவர் கூறுவது தான் மிகவும் விந்தையாகவும், வியப்பாகவும் இருக்கிறது. இதைவிட பச்சை துரோகத்தை தமிழகத்திற்கு பா.ஜ.க. செய்துவிட முடியாது.

எனவே, தமிழகத்திற்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தரவேண்டிய தண்ணீரை வழங்குவதற்குக் கர்நாடக அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. இந்த நிலையில் காவிரி படுகை விவசாயிகளின் நலனுக்கு விரோதமாகக் கருத்துக்களைக் கூறியிருக்கிற தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்....  கோவில்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்கள் திறப்பு- பக்தர்கள் மகிழ்ச்சி

Tags:    

Similar News