வழிபாடு
திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி.ரோட்டின் வளாகத்தில் உள்ள தெப்பக்குளம்.

1-ந்தேதி கொடியேற்றம்: உள்திருவிழாவாக நடக்கும் திருப்பரங்குன்றம் தெப்பத்திருவிழா

Published On 2022-01-29 06:54 GMT   |   Update On 2022-01-29 06:54 GMT
திருப்பரங்குன்றம் கோவிலில் உள்திருவிழாவாக தெப்பத்திருவிழா நடக்கிறது. வருகின்ற 1-ந்தேதி கொடியேற்றப்படுகிறது. திருவிழாவில் சுவாமி புறப்பாட்டின் போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 12 மாதமும் திருவிழா நடைபெற்று வருகிறது.இதில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் 10 நாட்கள் தெப்பத்திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டிற்கான தெப்பத் திருவிழா வருகின்ற 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

இதே சமயம் கொரோனா வைரஸ் 3-வது அலை பரவல் காரணமாக உள்திருவிழாவாக தெப்பத்திருவிழா நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் காலை, மாலை வேளையில் சுவாமி புறப்பாட்டின்போது பக்தர்களுக்கு அனுமதி தவிர்க்கப்படுகிறது.

வருகின்ற 1-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.45 மணி முதல் 11 மணிக்குள் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. திருவிழாவின் 9-வது நாளாக வருகின்ற 9-ந்தேதி தைக்கார்த்திகை தினமாகும். திருவிழாவின் 10-வது நாள் வழக்கப்படி தெப்பகுளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறவேண்டும். ஆனால் அரசின் நெறிமுறைப்படி கோவிலுக்குள் (தெப்ப உற்சவம்) சுவாமி புறப்பாடு நடக்கிறது.

தெப்பத்திருவிழாவை பொறுத்தவரை முன்பு காலையிலும் மாலையிலுமாக வித, விதமான வாகனங்களில் சுவாமி எழுந்தருளி நகரின் முக்கிய 4 வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். திருவிழாவின் 9-வதுநாள் காலையில் ஜி.எஸ்.டி.ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தில் சுவாமி எழுந்தருளி தெப்பமுட்டு தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெறும். மேலும் இதே நாளில் 16 கால் மண்டபம் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்டு தயாரான சிறிய வைரத்தேரில் தெய்வானையுடன் முருகப்பெருமான் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். இதனையடுத்து நகரின் 4 முக்கிய வீதிகளில் தேரோட்டம் நடைபெறும். அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்வார்கள்.

திருவிழாவின் 10-வது நாள் தெப்ப உற்சவத்தையொட்டி ஜி.எஸ்.டி ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்டு தயாரான தெப்ப மிதவையில் தெய்வானையுடன் முருகப்பெருமான் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். அப்போது ஏராளமான பக்தர்கள் தெப்ப மிதவையில் இணைக்கப்பட்ட வடத்தினை பயபக்தியுடன் இழுப்பார்கள். தெப்பகுளத்திற்குள் 3 முறை தெப்ப மிதவையானது வலம் வரும். இதேபோல இரவில் மின்னொளியில் வானவேடிக்கைகளுடன் தெப்பத் திருவிழா கோலாகலமாக நடைபெறும்.

அப்போதும் ஏராளமான பக்தர்கள் திரளாக கூடி நின்று அரோகரா கோஷம் முழங்க தெப்ப மிதவையின் வடத்தை பிடித்து இழுத்து தரிசனம் செய்வார்கள். இதனை தொடர்ந்து சன்னதி தெருவில் சொக்கநாதர் கோவில் வளாகத்தில் சூரசம்கார லீலை நடைபெறும். ஆனால் அரசின் நெறிமுறைக்கு உட்பட்டு தெப்பமுட்டுதள்ளுதல், தேரோட்டம், தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவமான தெப்பம் வலம்வருதல், சன்னதி தெருவில் சூரசம்காரம் லீலை தவிர்க்கப்பட்டுள்ளது

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இரவில் ஊரடங்கு, வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு கோவில் மூடல் தவிர்ப்பு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு தவிர்க்கப்பட்டுள்ள நிலையில் கோவிலுக்குள் உள்திருவிழாவாக தெப்பத்திருவிழா என்பதும் திருவிழா சுவாமி புறப்பாட்டில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதும், தேரோட்டம், தெப்பக்குளத்தில் தெப்பம் வலம் வருதல் தவிர்க்கப்பட்டு இருப்பதும் பக்தர்களிடையே மனவேதனையை ஏற்படுத்தி உள்ளது. தற்போது நடைபெறும் தெப்பத்திருவிழாவின் போது சுவாமி புறப்பாட்டின் போது பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Tags:    

Similar News