வழிபாடு
பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

Published On 2021-12-17 04:57 GMT   |   Update On 2021-12-17 04:57 GMT
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது.
பழங்கால மக்கள் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை யை நடத்தினர். அப்போது, மனிதன் தானாக கற்றதும், அறிந்து கொண்டவைகளும் அதிகம். அந்த வகையில் வந்தது தான் கோலக்கலையாகும். கோலம் என்றால் அழகு, ஒப்பனை என பொருள் உண்டு. பழங்காலத்தில் மாட்டு தொழுவத்தில் சாணத்தால் மொழுகிய பகுதிகளில் பூச்சிகள் வராமல் இருப்பதை கவனித்த மனிதர்கள், இயற்கையோடு இணைந்து இதை பயன்படுத்தும் நோக்கில் வீட்டு வாசலில் சாணத்தை மொழுகி கோலமிட ஆரம்பித்தனர்.

அந்த வகையில் தமிழ் மாதத்தில் மார்கழி மாதத்தில் போடும் கோலத்திற்கு தனி சிறப்பு உண்டு. ஏனெனில் தமிழ்கால கணிப்பு முறைப்படி ஆண்டின் 9-வது மாதம் மார்கழி ஆகும். சூரியன் தனுசு ராசியில் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 நாட்கள், 20 நாடி, 53 விநாடி கொண்ட கால அளவை தான் மார்கழி மாதம் குறிக்கிறது.

மார்கழி மாதத்தை சைவர்கள் தேவர் மாதம் எனவும் குறிப்பிடுகின்றனர். அதாவது கடவுளை வழிபடும் மாதமாகும். இந்த மாதத்தில் அனைத்து கோவில்களிலும் அதிகாலை 4 மணிக்கு திறந்து திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி போன்ற பல்வேலு பூஜைகள் நடை பெறுவது வழக்கம்.

அதன்படி மார்கழி மாதம் பிறந்ததை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி கடலூர் புதுப்பாளையம் ராஜகோபாலசாமி கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதேபோல் கடலூர் மஞ்சக்குப்பம் ஆட்கொண்ட வரதராஜ பெருமாள் கோவில், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில், திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Tags:    

Similar News