செய்திகள்
ராஜ்குமார்

தஞ்சையில் போலீசாரை ஏமாற்றி விட்டு கைதி தப்பியோட்டம்

Published On 2020-11-20 09:32 GMT   |   Update On 2020-11-20 09:32 GMT
தஞ்சையில் போலீசாரை ஏமாற்றி விட்டு கைதி தப்பியோடி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தஞ்சாவூர்:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது 51). இவர் மீது திருச்சி, மணப்பாறை, நாகை உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டதாக பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் மணப்பாறையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜ்குமார் கைது செய்யப்பட்டார்.

அப்போது அவரிடம் இருந்து 70 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து இவர் திருச்சி மாவட்டம் முசிறி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் வழக்கு தொடர்பாக நாகை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்டார்.

பின்னர் ராஜ்குமாரை மீண்டும் முசிறி சிறையில் அடைப்பதற்காக போலீசார் பஸ் மூலம் தஞ்சைக்கு இரவு அழைத்து வந்தனர். புதிய பஸ் நிலையத்தில் இறங்கி திருச்சி செல்லும் பஸ்சில் ஏறுவதற்காக சென்றபோது சிறுநீர் கழிக்க வேண்டும் என்று ராஜ்குமார் கூறியுள்ளார். இதையடுத்து போலீசாரும் அவரை சிறுநீர் கழிக்க அனுமதித்தனர். அப்போது அவர் போலீசாரை ஏமாற்றி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

இதுகுறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ராஜ்குமாரை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News