செய்திகள்
விடுவிக்கப்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்

கடத்தப்பட்ட சி.ஆர்.பி.எஃப் வீரரை விடுவித்தது நக்சலைட்

Published On 2021-04-08 14:07 GMT   |   Update On 2021-04-08 14:07 GMT
சத்தீஸ்கரில் பாதுகாப்புப்படை வீரர்கள் தாக்குதல் நடத்திய வேலையில், ஒரு சி.ஆர்.பி.எஃப் வீரரை நக்சலைட்டுகள் பிணைக்கைதியாக பிடித்திருந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் கடந்த 3-ம்தேதி பாதுகாப்புப் படையினர் நக்சலைட்டுகளுக்கு எதிராக மாபெரும் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது வனப்பகுதிக்குள் மறைந்திருந்த நக்சலைட்டுகள், பாதுகாப்புப் படையினரை குறிவைத்து திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. பல மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் நக்சலைட்டுகள் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 22 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். நக்சலைட்டுகள் தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த என்கவுண்டர் தாக்குதலின்போது பாதுகாப்புப்படையின் கோப்ரா கமாண்டோ படைப்பிரிவை சேர்ந்த வீரர் ஒருவர் மாயமானார். அவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இதற்கிடையே, இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக நக்சலைட்டுகள் தரப்பில் அறிக்கை வெளியிட்டப்பட்டது.

அதில் பீஜப்பூர் தாக்குதலில் பாதுகாப்புப்படையினர் 24 பேர் உயிரிழந்ததாகவும் 31 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், தங்கள் தரப்பில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக நக்சலைட்டுகள் தெரிவித்துள்ளனர். இந்த அறிக்கையில் மாயமான பாதுகாப்புப்படை வீரர் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாக நக்சலைட்டுகள் தெரிவித்திருந்தனர். மேலும், அவரது படத்தையும் வெளியிட்டிருந்தனர்.



கடத்தப்பட்ட பாதுகாப்பு படைவீரர் ’கோப்ரா’ கமாண்டோ படைப்பிரிவை சேர்ந்த ராகேஷ்வர் சிங் மன்ஹஸ் என தெரிய வந்தது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ்வரை பேச்சுவார்த்தை நடத்தி மீட்டுத்தர வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். அரசும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் ராகேஷ்வர் சிங் விடுவிக்கப்பட்டுள்ளார்.

விடுவிக்கப்பட்டதை சிஆர்பிஎஃப் உறுதி செய்துள்ளனர். அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
Tags:    

Similar News