செய்திகள்
கோப்புபடம்

முளைப்புத்திறன் குறைந்த விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை - அதிகாரிகள் எச்சரிக்கை

Published On 2021-09-23 06:17 GMT   |   Update On 2021-09-23 06:17 GMT
விதை விற்பனையாளர்கள் பகுப்பாய்வு முடிவு அறிக்கை பெறப்படாத நிலையில் விதை குவியலில் இருந்து விதை மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி பகுப்பாய்வு அறிக்கை பெற வேண்டும்.
திருப்பூர்:

வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை, வேளாண் பல்கலை, தமிழ்நாடு கால்நடை பல்கலை, கூட்டுறவு கடன் சங்கங்கள், விதை விற்பனை கடைகள் மூலம் விவசாயிகளுக்கு தேவையான விதை விற்கப்படுகின்றன.

உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்கள் விதை விற்பனைக்கு முன்னதாக முளைப்புத்திறன் பரிசோதனை செய்து முடிவுகளை பெற வேண்டும். 

உண்மை நிலை விதைகளை வினியோகிஸ்தர்கள் சிறு விற்பனையாளருக்கு அனுப்பும் போது விதை குவியலுக்குரிய பகுப்பாய்வு முடிவையும் அறிக்கை நகலுடன் அனுப்ப வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை அதிகாரிகள் கூறியதாவது:

விதை விற்பனையாளர்கள் பகுப்பாய்வு முடிவு அறிக்கை பெறப்படாத நிலையில் விதை குவியலில் இருந்து விதை மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி பகுப்பாய்வு அறிக்கை பெற வேண்டும். 

அதன் அடிப்படையில் உண்மை நிலை விதைகளை விற்பனை செய்ய வேண்டும். பகுப்பாய்வு முடிவுகள் விரைவில் தேவைப்படும் பட்சத்தில் முன்னுரிமை அடிப்படையில் ஆய்வுக்கு அனுப்பி அறிக்கை பெற்று கொள்ள வேண்டும். 

விவர அட்டையில் 14 விவரங்களுடன் கூடிய உண்மை நிலை அட்டையை விதை சிப்பங்களில் பொருத்த வேண்டும். விதை விற்பனையில் முளைப்புத்திறன் குறைந்த விதைகளை விற்கக்கூடாது. 

விதிமுறைகளை மீறுவோர் மீது விதைச்சட்டம் 1966 மற்றும் விதை விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் சட்டம் 1993-ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News