ஆன்மிகம்
வெள்ளி அம்பாரி வாகனங்களில் உற்சவர்கள் வீதிஉலா வந்த காட்சி.

மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா 2-வது நாள்: வெள்ளி அம்பாரிகளில் உற்சவர்கள் வீதிஉலா

Published On 2021-03-08 03:01 GMT   |   Update On 2021-03-08 03:01 GMT
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 2-வது நாளில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கொடியேற்றம் நடந்தது. வெள்ளி அம்பாரிகளில் உற்சவர்கள் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ஸ்ரீகாளஹஸ்தி :

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் முதல் நாளான நேற்று முன்தினம் பக்த கண்ணப்பர் கொடியேற்றம் நடந்தது.

விழாவின் 2-வது நாளான நேற்று வெள்ளி அம்பாரி வாகனங்களில் உற்சவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் பஞ்சமூர்த்திகளோடு ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

மதியம் 12.30 மணியளவில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கொடியேற்றம் நடந்தது. கோவில் வளாகத்தில் மூலவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சன்னதி அருகில் உள்ள தங்கக்கொடி மரம் ஓரம் பஞ்சமூர்த்திகளை எழுந்தருள செய்து, வேதப் பண்டிதர்கள் கலச ஸ்தாபனம் செய்து, சிறப்புப்பூஜை நடத்தினர்.

வேத மந்திரங்கள் முழங்க சப்த ரிஷிகளையும், முனிவர்களையும், தேவர்களையும் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் தங்கக்கொடிமரத்தில் வேதப் பண்டிதர்களால் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கொடியேற்றம் நடந்தது. அத்துடன் பெண் பக்தர்கள் வழங்கிய 3050 சேலைகளும் கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.

அதைத்தொடர்ந்து கலசங்களில் இருந்த புனித நீரால் தங்கக்கொடி மரத்துக்குச் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் ெநய்வேத்தியம் நடந்தது. அதைத்தொடர்ந்து இரவு 9 மணியளவில் வெள்ளி அம்பாரி வாகனத்தில் உற்சவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். கொடியேற்றும் விழாவில் ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பியப்பு.மதுசூதன்ரெட்டி, நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தம்பதியர், துணை நிர்வாக அதிகாரி தனபால், கோவில் ஆய்வாளர் ஹரியாதவ் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News