செய்திகள்
வழக்கு பதிவு

பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: மதுரையில் 2 ஆண்டுகளில் 230 போக்சோ வழக்குகள் பதிவு

Published On 2021-11-25 09:00 GMT   |   Update On 2021-11-25 09:00 GMT
மதுரை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் வழக்குகள் அதிகரித்து வருவது பொது மக்களிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை:

மதுரை மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் தொல்லை அதிகரித்து வருகிறது. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.

மதுரை மாவட்டத்தில் கடந்த 2020-21-ம் ஆண்டுகளில் பதிவான போக்சோ வழக்குகள் தொடர்பான அட்டவணை பட்டியலை கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வெளியிட்டு உள்ளது.

அதன்படி மதுரை மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிராக பாலியல் பலாத்காரத்தில் தொடர்புடையதாக 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர குழந்தைகளிடம் பாலியல் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டதாக 51 வழக்குகள் பதிவாகி உள்ளன.

குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றவாளிகள் மீது நடப்பாண்டில் 23 வழக்குகள் பதிவாகி உள்ளன.

மதுரை மாவட்டத்தில் நடப்பாண்டில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட தாக 74 பேர் மீது போலீசார் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

மதுரை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக 230 வழக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகம் கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியருக்கு நிவாரணம் வழங்கியது தொடர்பான அட்டவணை பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன்படி 102 பேர் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் உள்ளனர். இதில் 7 பேருக்கு இடைக்கால நிவாரணமாக 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 13 பேருக்கு 27 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் முழு நிவாரணமாக தரப்பட்டு உள்ளது.

பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானதாக ஒருவருக்கு இடைக்கால நிவாரணமாக 2 லட்சம் ரூபாய் தரப்பட்டுள்ளது.

இதேபோல 10 பேருக்கு 14 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் முழு நிவாரணமாக வழங்கப்பட்டு உள்ளது. போக்சோ வழக்குகளில் நிவாரணம் கோரி 11 பேர் விண்ணப்பித்து உள்ளனர். 9 வழக்குகள் ஆரம்பக்கட்ட விசாரணையில் உள்ளன என்று அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மதுரை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் வழக்குகள் அதிகரித்து வருவது பொது மக்களிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News