செய்திகள்
அம்பதிராயுடு

ஊழல் புகார் கூறிய அம்பதிராயுடு மீது நடவடிக்கை - ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் முடிவு

Published On 2019-11-28 07:24 GMT   |   Update On 2019-11-28 07:24 GMT
பல்வேறு புகார்களை கூறிய அம்பதிராயுடு மீது நடவடிக்கை எடுக்க ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.
ஐதராபாத்:

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காத விரக்தியில் அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஐதராபாத்தை சேர்ந்த அம்பதிராயுடு அறிவித்தார். பின்னர் அவர் தனது முடிவை மாற்றிக் கொண்டார்.

சமீபத்தில் நடந்த விஜய் ஹசாரே மற்றும் முஸ்தாக் அலி கோப்பைக்கான போட்டியில் ஐதராபாத் அணியின் கேப்டனாக அம்பதிராயுடு இருந்தார்.

இதற்கிடையே அவர் ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் மீது பல்வேறு புகார்களை தெரிவித்து இருந்தார். ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் ஊழல் நடந்துள்ளது. பணம் மற்றும் ஊழல்வாதிகளால் ஐதராபாத் கிரிக்கெட் எப்படி முன்னேறும் என்று கூறி இருந்தார்.

இதுதொடர்பாக தெலுங்கானா மந்திரிக்கும் தனது புகாரை அவர் அனுப்பி இருந்தார்.

அம்பதிராயுடுவின் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான அசாருதீன் கூறும்போது, “அவர் விரக்தி அடைந்த கிரிக்கெட் வீரர்” என்றார்.

அசாருதீனின் கருத்துக்கு பதிலளித்த அம்பதிராயுடு, “இதை தனிப்பட்ட பிரச்சினையாக பார்க்க வேண்டாம். இந்த பிரச்சினை நம்மை விட பெரியது. தனிப்பட்ட மோதலை விட்டுவிட்டு வருங்கால கிரிக்கெட் வீரரை காப்பாற்றுங்கள்” என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் ஊழல் புகார் கூறிய அம்பதிராயுடு மீது நடவடிக்கை எடுக்க ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் முடிவு செய்திருந்தது.

இது தொடர்பாக ஐதராபாத் கிரிக்கெட் சங்க செயலாளர் விஜய் ஆனந்த் கூறியதாவது:-

அம்பதிராயுடு ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்துக்கு இழிவு ஏற்படுத்தும் விதமாக பேசி இருக்கிறார்.அவர் விதிமுறைகளை மீறி உள்ளார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளோம்.

தலைமைசெயல் அதிகாரி அவரிடம் விசாரணை நடத்த இருக்கிறார். அவரது அறிக்கையின் அடிப்படையில் அம்பதிராயுடுவின் மீது நடவடிக்கை இருக்கும்.
Tags:    

Similar News