உள்ளூர் செய்திகள்
புதிய பஸ் நிலையம் வெறிச்சோடி கிடக்கும் காட்சி.

நெல்லையில் முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்

Published On 2022-01-16 06:03 GMT   |   Update On 2022-01-16 06:03 GMT
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 2&வது வாரமாக இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. நெல்லையில் முழு ஊரடங்கால் கடைகள் அடைக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடின.
நெல்லை:

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 2&வது வாரமாக இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

இதனையொட்டி நெல்லை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மாநகர பகுதியில் 500 போலீசாரும், மாவட்டத்தில் 2000 போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.



முன்னீர்பள்ளம், கங்கைகொண்டான், சீதபற் பநல்லூர், காவல்கிணறு, வன்னிகோனேந்தல், மூன்றடைப்பு உள்ளிட்ட 6 நிரந்தர சோதனை சாவடிகள் மற்றும் 12 தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் தேவையின்றி சாலையில் சுற்றி திரிந்தவர்களை பிடித்து விசாரித்தனர். பின்னர் அவர்களை எச்சரிக்கை செய்து வீட்டுக்கு திருப்பி அனுப்பி வைத்தனர். ஒரு சில இடங்களில் வாகன ஓட்டிகளுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.

மாநகர பகுதியில் பழையபேட்டை, டவுன், சந்திப்பு, தச்சநல்லூர், பாளை, சமாதானபுரம், கே.டி.சி. நகர், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட மாநகர பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். வாகன ஓட்டிகள் தேவையின்றி செல்வது தெரியவந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அத்தியாவசிய தேவைகளான பால், மருத்துவம் தொடர்பான வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டது. கடைகள் அடைக்கப் பட்டதால் மக்கள் நடமாட்டம் இல்லை. மாநகர பகுதியில் உள்ள எஸ்.என். ஹைரோடு, புறவழிச்சாலைகள், திருச்செந்தூர், தூத்துக்குடி சாலைகள் உள்ளிட்டவை வாகனங்கள் நடமாட்டம் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது.

தைப்பூசத்தையொட்டி திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மட்டும் வழக்கம்போல் நடந்து சென்றனர். அவர்கள் முகக்கவசம் அணிந்து செல்லுமாறு போலீசார் அறிவுரை வழங்கினர்.

சாலையில் சுற்றித்திரியும் ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வ தொண்டு அமைப்பினர் 3 வேளையும் உணவு வழங்கினர்.

களக்காடு தலையணை, பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, அணைக்கட்டுகள் பகுதிகளில் மக்கள் செல்ல ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு உள்ளதால் அந்த இடங் களும் வெறிச்சோடி காணப்பட்டன.

ஓட்டல்களில் இருந்து சாப்பாடு பார்சல்கள் எடுத்துச்சென்று வீடுகளுக்கே கொண்டு கொடுத்தவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதேபோல நெல்லை மாவட்டத்தில் முக்கிய நகரமான அம்பை, கல்லிடைக்குறிச்சி, முக்கூடல், சேரன்மகாதேவி, திசையன்விளை, ராதாபுரம், உவரி, களக்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் பொதுமக்கள் சாலைகளில் சுற்றித்திரிய அனுமதிக்கப்படவில்லை.  

இதனால் மாவட்டம் முழுவதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. உவரி, ராதாபுரம், கூடங்குளம் பகுதிகளில் உள்ள கடற்கரைகளில் கடலோர பாதுகாப்பு படையினர் ரோந்து சென்றனர். அங்கும் சுற்றுலா பயணிகள்  மற்றும் பொதுமக்கள் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.
Tags:    

Similar News