செய்திகள்

முத்தலாக் வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Published On 2017-03-30 09:42 GMT   |   Update On 2017-03-30 09:42 GMT
இஸ்லாமிய பெண்களை முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

இஸ்லாமிய வழக்கப்படி "தலாக்' என்ற வார்த்தையை பிரயோகித்து விவகாரத்து செய்து கொள்ளும் நடைமுறை காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த முறையால் பெண்களுக்கு பாரபட்சமான நீதி வழங்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இம்முறையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இது குறித்து பதிலளிக்கும்படி, அனைத்திந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் உள்ளிட்டோருக்கு, தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு, 'நோட்டீஸ்' அனுப்பியது.

முஸ்லிம் சமூகத்தில் மூன்று முறை "தலாக்" என கூறி விவாகரத்து செய்யும் நடைமுறையை அரசியல் சாசன விதிகளின்படி ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது.



மூன்று முறை தலாக் செய்யும் முறையை நியாயப்படுத்தும் விதமாக இந்தியாவின் உயர்மட்ட இஸ்லாமிய  சட்ட வாரியம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வாக்குமூலத்தை பதிவு செய்தது. சுப்ரீம் கோர்ட்டு மத சுதந்திரத்தில் தலையிடக்கூடாது என்றும் சமூக சீர்திருத்தம் என்ற பெயரில் தனிப்பட்ட சட்டங்களை மீண்டும் மாற்றி எழுதக்கூடாது என்றும் அந்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டுக்கும், இஸ்லாமிய தனி நபர் சட்ட வாரியத்திற்கும் கருத்து மோதல்கள் நிகழ்ந்து வந்த நிலையில் இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. மேலும், வரும் மே மாதம் 11-ம் தேதி முதல் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.

முன்னதாக, இவ்வழக்கை கோடை விடுமுறைக்கு பின்னர் விசாரிக்க வேண்டும் என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வைத்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர்.

Similar News