செய்திகள்
ஜி.கே.வாசன்

அம்மா உணவகங்கள் வழக்கம்போல் செயல்பட வேண்டும்- ஜி.கே.வாசன்

Published On 2021-10-28 07:23 GMT   |   Update On 2021-10-28 07:23 GMT
அம்மா உணவகங்கள் கடந்த கால ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது போல சிறப்பாக செயல்படுத்தப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சென்னை மாநகராட்சி சார்பில் 407 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வார்டுக்கு 2 வீதம் 200 வார்டுகளில் மொத்தம் 400 உணவகங்களும், 7 அரசு மருத்துவமனைகளிலும் அம்மா உணவகங்கள் செயல்படுத்தப்படுகிறது.

கொரோனா ஊரடங்கின் போதும் ஏழை மக்களின் பசிப்பிணியை போக்கியது அம்மா உணவகம்.

தற்போது தமிழக அரசு நிதி நிலையை சுட்டிக்காட்டி, உணவு பொருட்களை குறைத்து வழங்குவதால், குறைந்த அளவிலேயே உணவு தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக இங்கு பணியாற்றும் ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் அம்மா உணவகங்களில் சுழற்சி அடிப்படையில் வேலை, பணியாளர்கள் குறைப்பு என்ற ரீதியில் செயல்படுத்த முயற்சிப்பதை எதிர்த்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக பெண்கள் அதிக எண்ணிக்கையில் இந்த உணவகங்களில் பணிபுரிந்து பலனடைந்து வருவது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

எனவே தமிழக அரசு அம்மா உணவகங்களின் எண்ணிக்கையை குறைப்பது, பணியாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக வேலை நாட்களில் சுழற்சி முறையை கொண்டுவருவது ஆகியவற்றில் ஈடுபடாமல் தொடர்ந்து அம்மா உணவகங்கள் கடந்த கால ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது போல சிறப்பாக செயல்படுத்தப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News