ஆன்மிகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கோலாகலமாக நடந்த மாசி திருவிழா தேரோட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கோலாகலமாக நடந்த மாசி திருவிழா தேரோட்டம்

Published On 2021-02-26 05:57 GMT   |   Update On 2021-02-26 07:20 GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா தேரோட்டம் இன்று கோலாகலமாக நடந்தது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் :

முருகப்பெருமனின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை வேளைகளில் சுவாமி விதவிதமான சப்பரங்களில் வீதி உலா வந்தார். திரு விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடந்தது. இதனையொட்டி காலை 7 மணிக்கு விநாயகர் தேர் புறப்பட்டு ரதவீதிகள் வழியாக வந்து நிலையம் வந்தடைந்தது.

தொடர்ந்து சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி-தெய்வானையுடன் வெள்ளித்தேரில் பவனி வந்தனர். கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். அவருடன் கோவில் செயல் அலுவலர் விஷ்ணு சந்திரன், தக்கார் பிரதிநிதி டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. தனப்பிரியா ஆகியோர் சேர்ந்து வடம் பிடித்து இழுத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அம்பாள் தேர் புறப்பட்டு ரதவீதிகள் வழியாக சென்று நிலையம் வந்து சேர்ந்தது.

நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநில துணை தலைவர் ஜெயக்குமார், பொதுச்செயலாளர் அரசுராஜா, காயாமொழியை சேர்ந்த கணேஷ்குமார் ஆதித்தன், குமரேச ஆதித்தன், சங்கேச ஆதித்தன், வரதராஜ ஆதித்தன், ஜெயேந்திர ஆதித்தன், கே.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன் உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர்.

நாளை (சனிக்கிழமை) 11-ம் திருவிழாவை முன்னிட்டு இரவு தெப்ப உற்சவமும், 12-ம் திருவிழா அன்று இரவு சுவாமி அம்பாள் மலர் கேடய சப்பர பவனியும் நடக்கிறது.

தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர். இதனையொட்டி தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

Tags:    

Similar News