செய்திகள்
சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையத்தில் 7 மாதங்களில் ரூ.14 கோடி போதை பொருட்கள் பறிமுதல்

Published On 2020-10-23 20:19 GMT   |   Update On 2020-10-23 20:19 GMT
கொரோனா ஊரடங்கு காலத்திலும் சென்னை விமான நிலையத்தில் கடந்த 7 மாதங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.14 கோடி போதை பொருட்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்:

கொரோனா வைரஸ் ஊரடங்கால் கடந்த 7 மாதங்களாக நாடே முடங்கி கிடந்தாலும் போதை பொருட்கள் கடத்தும் கும்பலின் பணிகள் வழக்கம்போல் எந்த வித தங்கு தடையும் இல்லாமல் நடந்தன. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் போதை பொருட்கள் கடத்தல் பெருமளவு அதிகரித்து விட்டன.

பன்னாட்டு பயணிகள் விமான சேவை இல்லாத இந்த காலகட்டத்திலும், சரக்கு விமானங்களில் போதை பொருட்கள் வெளிநாடுகளுக்கு செல்கின்றன. அதேபோல் வெளிநாடுகளில் இருந்து புதிய வகையிலான போதை பொருட்களை சென்னைக்கு கடத்தி வருகின்றனர். போதை பொருட்கள் அடங்கிய பல பாா்சல்களில் “மருத்துவ பொருட்கள் அவசரம்” என்று குறிப்பிட்டு அனுப்பப்படுகிறது.

சென்னை விமான நிலையத்தில் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் ஊரடங்கு காலமான கடந்த 7 மாதங்களில் போதை பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி அமோகமாக நடந்துள்ளன. இதுவரை வெளிநாடுகளில் மட்டுமே பிரபலமாக இருந்த போதை ஸ்டாம்புகள், முதல் முறையாக நெதா்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு வந்து உள்ளது.

வெளிநாடுகளில் பிரபலமான போதை மாத்திரைகள் பெருமளவு ஜொ்மன், நெதா்லாந்து, பிரான்ஸ், பிரிட்டன், பெல்ஜியம், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து தாராளமாக கூரியர் பாா்சல்களில் சென்னை வந்தன.

அதேபோல் உயா்ரக கஞ்சா பவுடா் மற்றும் மாத்திரைகள் எத்தியோப்பியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்தும் சென்னைக்கு வந்தன. சென்னையில் இருந்து மெத்தோகுயிலோன், ஒப்பியம், பெத்திடோபெடிரின், சூடாபெட்ரீன் என்ற வகையிலான போதை பவுடா்கள், போதை மாத்திரைகள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு கடத்தப்படுகின்றன.

சென்னை விமான நிலையத்தில் கடந்த 7 மாதங்களில் சுங்கத்துறை இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் அதிரடியாக போதை பொருட்கள் கடத்தல் சம்பந்தமாக 22 வழக்குகளை பதிவு செய்துள்ளனா். அதில் 14 வழக்குகள் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்டவை. 8 வழக்குகள் சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு போதை பொருட்களை கடத்த முயன்றவை.

இந்த 22 வழக்குகளில் ஒரு பெண் உள்பட 26 பேரை கைது செய்துள்ளனா்.

மொத்தம் ரூ.14 கோடி மதிப்புள்ள போதை பொருட்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News