செய்திகள்
ஆவின் நெய்

20 பொங்கல் பரிசு பொருட்களில் 100 கிராம் ஆவின் நெய் கிடைக்கும்

Published On 2021-11-23 07:27 GMT   |   Update On 2021-11-23 07:27 GMT
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வழங்கப்பட உள்ள பொங்கல் தொகுப்பு பொருட்களை அரசு நிறுவனங்களில் கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை:

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைகளுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் தமிழக அரசு சார்பில் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், கரும்பு உள்ளிட்ட 20 பொருட்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வழங்கப்பட உள்ள இந்த பொங்கல் தொகுப்பு பொருட்களை அரசு நிறுவனங்களில் கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அந்த வகையில் பொங்கல் தொகுப்பில் இடம் பெற்றுள்ள நெய் ஆவின் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.

ஒரு குடும்ப அட்டைக்கு 100 கிராம் ஆவின் நெய் வீதம் 2 கோடியே 15 லட்சம் பாக்கெட்டுகள் தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் ஆவின் நிறுவனத்துக்கு ரூ.135 கோடிக்கு நெய் விற்பனையாகிறது.

மேலும் ஆவின் நிறுவனத்தில் நெய் கொள்முதல் செய்யப்பட்டதால் இதனுடைய பலன் விவசாயிகளுக்கு நேரடியாக கிடைக்கிறது. 2,400 டன் வெண்ணெய் இதற்கு பயன்படுத்தப்படுகிறது.

இதனால் பால் விவசாயிகளுக்கு விரைவில் பணம் கிடைக்க வாய்ப்புள்ளதாக ஆவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொங்கல் பரிசு தொகுப்பில் ஆவின் நெய் இடம் பெற்றிருப்பது வரவேற்க கூடியது. இதன் மூலம் ஆவின் நிறுவனத்துக்கு வருவாய் கிடைப்பதால் அதன் பலன் விவசாயிகளுக்கு சென்று அடைகிறது. 5 ஆயிரம் டன் வெண்ணெய் விவசாயிகள் மூலம் கிடைக்கிறது.

பொங்கல் தொகுப்புக்கு ஆவின் நெய் வழங்கப்படுவதன் மூலம் 2,400 டன் பயன்படுத்தப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு காலதாமதம் இல்லாமல் விரைவாக பால் பணம் கிடைக்கும்.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரூ.83 கோடிக்கு ஆவின் பொருட்கள் விற்பனையாகி உள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் ரூ.26 கோடி அதிகமாகும். 46 சதவீதம் விற்பனை இந்த வருடம் அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.



Tags:    

Similar News