செய்திகள்
ஆலிஸ் வெல்ஸ் மற்றும் அப்துல் மொமென்

வங்காளதேசத்தில் முதலீடு செய்ய விரும்பும் அமெரிக்கா

Published On 2019-11-06 12:26 GMT   |   Update On 2019-11-06 12:26 GMT
வங்காளதேசத்தில் உள்கட்டமைப்பு, எரிசக்தி துறைகளில் மிகப்பெரிய முதலீடுகள் செய்ய விரும்புவதாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய துறை விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி செயலாளர் தெரிவித்துள்ளார்.
டாக்கா:

தெற்கு மற்றும் மத்திய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி செயலாளர் ஆலிஸ் வெல்ஸ் 3 நாள் அரசுமுறைப் பயணமாக வங்காளதேசம் சென்றுள்ளார். அவர் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா உள்பட முக்கிய அரசு தலைவர்களை சந்திக்க உள்ளார். முதல் கட்டமாக அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி அப்துல் மொமெனை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து நிருபர்களுக்கு ஆலிஸ் அளித்த பேட்டியில்,  

வங்காளதேசத்தில் நேரடியாக வெளிநாட்டு முதலீடுகள் செய்வது, அமெரிக்க வர்த்தகத்தை விரிவுபடுத்துவது மற்றும் வங்காளதேசத்தின் இலக்குகளை மேம்படுத்த உதவுவது பற்றி கலந்தாலோசித்தோம். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வங்காளதேச நிறுவனங்களுடன் வர்த்தக உறவை வலுப்படுத்துவதற்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

புலனாய்வு பத்திரிகை, நீதித்துறை மற்றும் நன்கு செயல்படும் சமூகம் வங்காளதேசத்தை முன்னேற்றுவதற்கு அவற்றின் பங்கை ஆற்ற வேண்டிய சக்திகள். அவை அனைத்தும் ஒன்றிணைந்து வங்காளதேசத்தை ஒரு மேம்பட்ட சமுதாயமாக உருவாக்குகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

‘இந்தோ-பசிபிக் பிராந்திய அமைப்பின் கீழ் மிகப்பெரிய முதலீடுகளை செய்ய அமெரிக்கா விரும்புகிறது. முதலீடுகளை வரவேற்று நட்பு நாடுகளாக இருக்க விரும்புகிறோம்’, என வெளியுறவுத்துறை மந்திரி அப்துல் மொமென் மற்றொரு பேட்டியில் தெரிவித்தார். 
Tags:    

Similar News