செய்திகள்
மெட்ரோ ரெயில்

மெட்ரோ ரெயில் 2-வது கட்ட பணிகள் அடுத்தவாரம் தொடங்க வாய்ப்பு

Published On 2021-06-07 08:09 GMT   |   Update On 2021-06-07 08:09 GMT
போரூரை, பவர் ஹவுசுடன் இணைப்பதற்கான 7.9 கி.மீ நீள திட்டத்துக்கு லார்சன் அன்ட்டூப்ரோ நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் ஒப்பந்தம் வழங்கியுள்ளது.
சென்னை:

சென்னையில் 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் அடுத்த வாரம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் சென்னை பூந்தமல்லி-போரூர் இடையே திட்டப்பணிகள் தொடங்கப்பட உள்ளது.

இதற்காக இந்துஸ்தான் நிறுவனம் மற்றும் கே.இ.சி. இன்டர்நே‌ஷனல் நிறுவனத்துடன் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் ரூ.1,147 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த திட்டப்பணிகள் 7.9 கி.மீ தூரம் கொண்டது.

இதற்கான பணிகளை தொடங்குவதற்காக சாலையின் சில பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை பைபாஸ் கிராசிங், ராமச்சந்திரா மருத்துவமனை, அய்யப்பன்தாங்கல் பஸ் டெப்போ, காட்டுப்பாக்கம், குமணன்சாவடி, கரையான் சாவடி, முல்லை தோட்டம், பூந்தமல்லி பஸ்நிலையம் மற்றும் பூந்தமல்லி பைபாஸ் ஆகிய பகுதிகளில் உயர்மட்ட பாதையாக அமைய உள்ளது.

இதற்கான சிறிய அளவிலான பூஜை அடுத்த வாரம் தொடங்கப்படும். பின்னர் உயர்மட்ட பாதைக்கான முதல்கட்ட பணிகள் தொடங்கப்படும். பணிகள் முடிய ஒரு வருடத்துக்கு மேல் ஆகலாம். பணிகள் தொடங்குவதற்கு போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் பயன்பாட்டுக்கு கேபிள்கள் போன்ற சிக்கல்களும் உள்ளன. முழு அளவிலான கட்டுமானத்தை தொடங்குவதற்கு முன்பு அவை தீர்க்கப்பட வேண்டும்.

அதன்பிறகு கட்டுமானப் பணிகளுக்கு 3 ஆண்டுகள் வரை ஆகலாம். சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்கு கூடுதலாக சில மாதங்கள் ஆகும். சோதனை ஓட்டத்துக்கு பிறகு இந்த பாதையில் மெட்ரோ ரெயில் ஓட 4 ஆண்டுகள் வரை ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே போரூரை, பவர் ஹவுசுடன் இணைப்பதற்கான 7.9 கி.மீ நீள திட்டத்துக்கு லார்சன் அன்ட்டூப்ரோ நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் ஒப்பந்தம் வழங்கியுள்ளது. இந்த நீட்டிப்புக்கான பணிகளும் இந்த மாதத்தில் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News