செய்திகள்
தற்கொலை

திருமங்கலம் அருகே தந்தை இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை

Published On 2021-02-20 08:26 GMT   |   Update On 2021-02-20 08:26 GMT
திருமங்கலம் அருகே தந்தை இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமங்கலம்:

மதுரை திருமங்கலம் அருகே தனக்கன்குளம் குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது56). இவர் மதுரையில் உள்ள ஆடிட்டர் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பத்மாவதி. இவர்களது மகன் ஸ்ரீதர் (26). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் கடந்த சில மாதங்களாக கண்ணன் வேலை இல்லாமல் இருந்தார். ஸ்ரீதரும் சென்னையில் இருந்து ஊருக்கு வந்து விட்டார். 2 பேருக்கும் வேலை இல்லாததால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.

இதில் ஏற்பட்ட விரக்தியில் கடந்த 15-ந்தேதி கண்ணன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தந்தையின் திடீர் மரணம் ஸ்ரீதரை கவலையடையச் செய்தது. கடந்த 3 நாட்களாக அவர் சரியாக சாப்பிடாமலும், யாருடனும் பேசாமலும் சோகத்தில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு மொட்டை மாடிக்கு செல்வதாக தாய் பத்மாவதியிடம் கூறி விட்டு சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் கீழே வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த பத்மாவதி மற்றும் உறவினர்கள் மொட்டை மாடிக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்குள்ள அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் ஸ்ரீதர் பிணமாக கிடந்தார்.

கணவர் இறந்து 4 நாட்கள் கூட ஆகாத நிலையில் மகனும் தற்கொலை செய்ததை பார்த்து பத்மாவதி கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஸ்ரீதர் தற்கொலை செய்த அறையை சோதனை செய்தபோது ஒரு கடிதம் சிக்கியது. ஸ்ரீதர் எழுதிய அந்த கடிதத்தில், எனது தந்தை மரணத்தால் கடும் மனஉளைச்சலில் இருந்தேன். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனது உடலை தாயாரிடம் ஒப்படைத்து விடுங்கள் என அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News