செய்திகள்
ரோகித் சர்மா

அதை சரியாக செய்தால் டெஸ்டில் சேவாக் போன்று ரோகித் சர்மா ஜொலிப்பார்: கவாஸ்கர்

Published On 2019-09-22 12:57 GMT   |   Update On 2019-09-22 12:57 GMT
டெஸ்ட் கிரிக்கெட்டில் சேவாக் போன்று ஜொலிக்க ரோகித் சர்மா இதை சரியாக செய்ய வேண்டும் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடி வருபவர் ரோகித் சர்மா. ஒயிட்-பாலில் சிறப்பாக விளையாடி வரும் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களம் இறங்கி விளையாடி வந்தார்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் டெஸ்ட் போட்டியில் தொடர்ச்சியாக இடம் கிடைக்கவில்லை. ரகானே மற்றும் விஹாரி மிடில் ஆர்டர் வரிசையில் சிறப்பாக விளையாடுவதால் ரோகித் சர்மாவுக்கு இடம் கிடைக்காமல் இருந்தது.

தொடக்க வீரராக களம் இறங்கிய லோகேஷ் ராகுல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் தென்ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தென்ஆப்பிரிக்கா தொடரில் ரோகித் சர்மா தொடக்க வீரராக களம் இறங்குவார் என்று தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரவித்துள்ளார்.

இந்நிலையில் சேவாக் போன்று தொடக்க வீரர் இடத்தில் ரோகித் சர்மா சிறப்பாக விளையாட, இந்த ஒரு விஷயத்தை சரியாக செய்ய வேண்டும் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில் ‘‘ரெட் பாலுக்கும், ஒயிட் பாலுக்கும் இடையில் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததே. ஒயிட் பாலில் ஐந்து ஓவர்கள் வரையே ஸ்விங் இருக்கும். ஆனால் ரெட் பந்தில் 35 ஓவர்களுக்குப் பிறகு கூட ஸ்விங் இருக்கும்.

ஆகவே, ஸ்விங் பந்தை எதிர்கொள்வது முற்றிலும் மாறுபட்ட விஷயம். இன்-ஸ்விங் பந்தில் ஏற்கனவே ரோகித் சர்மா சற்று திணறடிக்கூடியவர். அவருடைய ஷாட் செலக்சன் சரியாக இருந்தால், டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ரன்கள் குவிப்பார்.



ரோகித் சர்மாவை பற்றி நாம் பேசும்போது, சேவாக் அளவிற்கு பாதுகாப்பாக விளையாடமாட்டார் என்கிறோம். ஆனால், சேவாக்கை விட ரோகித் சர்மா அதிக ஷாட்டுகள் விளையாடுவார். சேவாக் இடது பக்கம் (On Side) அதிக ஷாட்டுகள் ஆடமாட்டார். ரோகித் சர்மாவால் புல் ஷாட், ஹூக் ஷாட் சிறப்பாக அடிக்க முடியும்.

அதனால் ரோகித் சர்மா அதிக அளவில் அட்டக்கிங் ஷாட்ஸ்கள் ஆடுவார். சிறந்த பந்துகளுக்கு எதிராக தனது பாதுகாப்பை இறுக்கினால், டெஸ்ட் போட்டியில் சேவாக்கை போன்று சிறப்பான வீரராக மாற முடியும்’’ என்றார்.
Tags:    

Similar News