ஆன்மிகம்
நெல்லையப்பர் கோவிலில் சப்பர பவனி

ஆனித்திருவிழா: நெல்லையப்பர் கோவிலில் சப்பர பவனி

Published On 2019-07-08 06:50 GMT   |   Update On 2019-07-08 06:50 GMT
நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழாவில் 2-வது நாளான நேற்று இரவு சப்பர பவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவில் ஆனித்திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன. காலை 8.30 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் சுவாமி, அம்பாள் வீதிஉலா நடைபெற்றது. இரவு 8 மணிக்கு சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் டவுன் 4 ரதவீதிகளிலும் உலா சென்றனர்.

திருவிழாவையொட்டி தினமும் இரவில் சுவாமி சன்னதியில் உள்ள நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் பக்தி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று பரணி மெல்லிசை குழுவின் பக்தி இசை, சிவகுமார், கடையம் பாலசுப்பிரமணியன் மற்றும் லட்சுமி சங்கரநாராயணன் ஆகியோரின் பக்தி சொற்பொழிவு, பரதநாட்டிய நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன.

திருவிழாவில் 3-வது நாளான இன்று (திங்கட்கிழமை) இரவு 8 மணிக்கு சுவாமி தங்க பூத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சிம்ம வாகனத்திலும் வீதிஉலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேலும் மகதியின் பக்தி இசை நிகழ்ச்சி மற்றும் பரதநாட்டியம், சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 8.30 மணி அளவில் தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது.
Tags:    

Similar News