செய்திகள்
போரிஸ் ஜான்சன்

இந்திய விவசாயிகள் போராட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் தவறாக பதில் அளித்த இங்கிலாந்து பிரதமர்

Published On 2020-12-09 19:47 GMT   |   Update On 2020-12-09 19:47 GMT
பிரதமர் போரிஸ் ஜான்சன், விவசாயிகள் பிரச்சினையை இந்தியா-பாகிஸ்தான் பிரச்சினையுடன் சேர்த்து குழப்பி, தவறாக பதில் அளித்தார்.
லண்டன்:

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் சர்வதேச அளவில் கவனம் பெற்று வருகிறது. இந்த போராட்டம் தொடர்பாக இங்கிலாந்தின் கவலைகளை பிரதமர் மோடிக்கு தெரியப்படுத்துமாறு அந்த நாட்டின் எதிர்க்கட்சி எம்.பி.யும், சீக்கியருமான தன்மன்ஜீத் சிங் தேசி, நாடாளுமன்றத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பிரதமர் போரிஸ் ஜான்சன், விவசாயிகள் பிரச்சினையை இந்தியா-பாகிஸ்தான் பிரச்சினையுடன் சேர்த்து குழப்பி, தவறாக பதில் அளித்தார்.

அவர் கூறுகையில், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையே என்ன நடக்கிறது? என்பது குறித்து எங்களுக்கு தீவிர கவலைகள் உள்ளன. ஆனால் இவை அனைத்துக்கும் இரு அரசுகளும் தீர்வுகாண முன்வருகின்றன. இரு நாடுகளுக்கு இடையேயான எந்த பிரச்சினையையும் இருதரப்பு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணவேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு’ என்று தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த தேசி, பிரதமர் போரிஸ் ஜான்சனை தனது டுவிட்டர் தளத்தில் சாடியிருந்தார். ‘நமது பிரதமர் என்ன பேசுகிறார்? என்பதை அவர் உணர்ந்திருந்தால், நன்றாக இருக்கும்’ என அதில் கூறியிருந்தார்.

விவசாயிகள் போராட்டம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என இங்கிலாந்து ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News