உள்ளூர் செய்திகள்
மீட்கப்பட்ட சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்

பஸ் நிலையத்தில் தவித்த குழந்தை மீட்பு

Published On 2022-01-11 11:58 GMT   |   Update On 2022-01-11 11:58 GMT
அரூர் அருகே பஸ் நிலையத்தில் தவித்த சிறுவன் மீட்கப்பட்டான்.
அரூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் பாவக்கல் பகுதியை அடுத்த எட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பு. இவரது மனைவி வசந்தா. இவர்களது 3 வயது மகன்  சபரி. இவர்கள் கோவையில் கூலி வேலை செய்து வருகின்றனர்.

பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு திரும்பிய வசந்தா மற்றும் அவரின் தாய், தந்தை ஆகியோர்  பஸ் மூலமாக அரூர் வந்தனர். பின்பு தனியார் பஸ் மூலம் ஆண்டியூர் கிராமத்திற்கு சென்று பஸ்சை விட்டு இறங்கும் போது சிறுவன் சபரியை தவற விட்டனர்.

பெற்றோரை காணாமல்  சிறுவன் சபரி சுமார் 2 மணி நேரமாக கண்ணீர் மல்க அழுதுகொண்டிருந்தான். இதை பார்த்து அங்கு இருந்த பயணிகள் பரிதாபப்பட்டு சிறுவனை மீட்டு அதிவிரைவு படை  போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

இதனிடையே குழந்தையை காணாமல் தவித்த பெற்றோர் பஸ் நிலையத்தில் நாலாபுறமும் தேடினர். அப்போது போலீசாரிடம் மகன் பத்திரமாக இருப்பதை அறிந்த வசந்த மகிழ்ச்சியில் ஆனந்தகண்ணீர்விட்டார். 

பின்னர் பெற்றோரிடம்  சிறுவனை போலீசார் ஒப்படைத்தனர். சிறுவனை கண்ட மகிழ்ச்சியில் பெற்றோர் அதிவிரைவு படை போலீசாரின் மனதாபிமான செயலுக்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவித்தனர்.
Tags:    

Similar News