ஆன்மிகம்
கண்ணனின் சிறுவயது லீலைகள்

கண்ணனின் சிறுவயது லீலைகள்

Published On 2020-08-11 09:25 GMT   |   Update On 2020-08-11 09:25 GMT
பால பருவத்தில் பல லீலைகளை கிருஷ்ணர் நிகழ்த்திக் காட்டினார். அவற்றில் சிலவற்றை இங்கே விரிவாக அறிந்து கொள்ளலாம்.
* குழந்தையாக இருக்கும் போதே கிருஷ்ணன் தன்னைக் கொல்லவந்த பூதனை, சகடாசுரன், திருணாவர்த்தன் உள்ளிட்ட பல அசுரர்களை வதம் செய்தார்.

* குழந்தைப் பருவத்தில் கிருஷ்ணனும் பலராமனும் தவழ்ந்து சென்று பலவித லீலைகளில் ஈடுபட்டனர். மாடுகள் மற்றும் அவற்றின் கன்றுகள் இருக்கும் தொழுவத்துக்குச் சென்று, அவற்றின் வாலைப் பிடித்து இழுத்து விளையாடினர்.

* ஆயர்குலச் சிறுவர்களை அழைத்துக்கொண்டு கோபியர்களின் வீடுகளுக்குச் சென்று, யாரும் அறியா வண்ணம் பால், தயிர், வெண்ணெயை எடுத்து உண்டு மகிழ்ந்தார்கள். கோகுலத்துப் பெண்கள், கிருஷ்ணரைப் பிடிக்க முயற்சித்தும் முடியவில்லை. இதனால் கோபியர்கள் யசோதையிடம் வந்து கிருஷ்ணரைப் பற்றிக் குறை கூறினார்கள்.

* ஒருமுறை வெண்ணெய் திருடும் பொழுது மதுகரவேணி என்ற பெண், கிருஷ்ணனை கையும் களவுமாகப் பிடித்து விட்டாள். யசோதையிடம் அழைத்துச் சென்றாள். அப்போது கிருஷ்ணன் அப்பெண்ணின் முகத்தில் கரி இருப்பதாகவும், தான் துடைத்து விடுவதாகவும் கூறினான். அதைக்கேட்ட மதுகரவேணி குனிந்து நின்றாள். உடனே, தன் கையில் இருந்த வெண்ணெயை அவளது கையிலும் வாயிலும் தடவி விட்டு தன் தாயான யசோதையை அழைத்தான்.

அங்கு வந்த யசோதையிடம், “அம்மா.. இந்தப் பெண், தன் கணவனுக்குத் தெரியாமல் வெண்ணெயைத் தின்று விட்டு என்மீது பழியைப் போடுகிறார். இவரது வாயில் வெண்ணெய் ஒட்டிக்கொண்டு இருக்கிறது பார்” என்று கூறிக் காட்டினான். இதைக்கேட்ட யசோதை மதுகரவேணியைப் பார்த்து, “நீ தவறு செய்துவிட்டு என் குழந்தை மீது பழி போடுகிறாயா?” என்று கேட்டாள். இதைக் கேட்ட மதுகரவேணி “அம்மா உன் மகன் மாயாவி கிருஷ்ணன், என் வாயில் வெண்ணெயைத் தடவிவிட்டு ஏமாற்றுகிறான்” என்றாள். யசோதை, ஸ்ரீகிருஷ்ணன் சொன்னதையே நம்பினாள்.

* ஒருமுறை கிருஷ்ணன் மண்ணைத் தின்று விட்டதாக, அவனுடைய தோழர்கள் யசோதையிடம் தெரிவித்தனர். யசோதை, “கிருஷ்ணா.. நீ மண்ணைத் தின்றாயா?” என்று அதட்டிக் கேட்டாள். “இல்லையம்மா” என்று அப்பாவிக் குழந்தைபோல் கண்ணன் மறுத்துக் கூறினான்.

“அப்படியானால், வாயைத் திறந்துகாட்டு” என்றாள் யசோதை.

கிருஷ்ணன், தன் பவளவாயைத் திறந்து காட்டினான். குழந்தை கிருஷ்ணன் வாய்க்குள் மண் இருக்கிறதா என்று பார்த்த யசோதைக்கு அதிசயம் காத்திருந்தது. சின்னஞ்சிறிய அந்த வாய்க்குள் அண்ட சராசரங்களும் தெரிந்தன. அஷ்டதிக்குப் பாலகர்கள், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், நவக்கிரகங்கள், தீவுகள், அஷ்ட நாகங்கள், தேவர்கள், மூவர்கள், முனிவர்கள், சித்தர்கள், மாடமாளிகைகள், கூட கோபுரங்கள் உட்பட உலகிலுள்ள அனைத்தும் தெரிந்தன.

இந்த அதிசயத்தைக் கண்டு மயங்கி நின்றாள் யசோதை. பின் தனது மாயையால், இந்த நிகழ்ச்சியை யசோதையின் நினைப்பிலிருந்து நீங்கிடுமாறு செய்தான் கிருஷ்ணன். இதுபோன்று பால பருவத்தில் பல லீலைகளை கிருஷ்ணர் நிகழ்த்திக் காட்டினார்.
Tags:    

Similar News