உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

பாலித்தீன் பைகளை ஒழிக்க கூடுதல் விழிப்புணர்வு தேவை

Published On 2022-04-16 10:07 GMT   |   Update On 2022-04-16 10:07 GMT
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாலித்தீன் பைகளை ஒழிக்க கூடுதல் விழிப்புணர்வு தேவை படுகிறது.
திருச்சி:

உடலுக்கு தீங்கு விளைவிக்கும், சுற்றுச்சூழலை பாதிக்கும், மண்ணுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க வேண்டும் என்ற குரல் எங்கும் ஓங்கி ஒலித்த வண்ணம் இருக்கிறது. ஆனால் நடைமுறையில் சாத்தியமாகவில்லை.

சமீபத்தில் நடந்த மாநகராட்சி மாமன்ற கூட்டத்திலும் பாலித்தீன் பைகளால் கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்படுகிறது. எனவே பாலித்தீன் பைகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேயர் மு. அன்பழகன் கேட்டுக்கொண்டார்.

மேலும் பொதுமக்கள் பொருட்கள் வாங்கி செல்லும் பாலித்தீன் பைகளில் வீட்டின் கழிவு பொருட்களை கட்டி அதனை கழிவுநீர் வாய்க்கால்களில் வீசி விடுகின்றனர். இது ஓரிடத்தில் சேர்ந்து சாக்கடை அடைப்புக்கு காரணமாகிறது என்றார்.

இதுபற்றி காந்திமார்கெட் பகுதியில் உள்ள  காய்கறி வியாபாரிகள் கூறும்போது, மார்கெட்டுக்கு காய்கறிகள் மற்றும் இதர பொருட்கள் வாங்க வரும் பலரும் பை எடுத்து வருவதில்லை. துணிப்பை மற்றும் மக்கும் ரக பைகளை காசு கொடுத்து வாங்கவும் மறுக்கிறார்கள். இதனால் வேறு வழியில்லாமல் பாலித்தீன் பைகளை கொடுக்கிறோம்.  

இல்லையென்றால் கஸ்டமரை இழக்க வேண்டி வருகிறது. பாலித்தீன் பைகளால் ஏற்படும் தீங்கினை மக்களிடம் அரசாங்கம் எடுத்து சொல்ல வேண்டும். மாநகராட்சி சார்பில் பள்ளி, கல்லூரி அளவில் மாணவர்கள் மத்தியில் பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் தீங்குகளை விளக்கி கூற வேண்டும் என்றனர்.

வேறு சில வியாபாரிகள் கூறும்போது, 20 ஆண்டுகளுக்கு முன்பு நிறையபேர் கடைகளுக்கு துணிப்பை கொண்டு சென்றனர். இப்போது அந்த வழக்கத்தை பார்ப்பது அரிதாக இருக்கிறது. பிளாஸ்டிக் பைகளே அதிகம் பயன்பாட்டில் உள்ளது. சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக்கை ஒழிக்க கூடுதல் விழிப்புணர்வு தேவையாக இருக்கிறது. மாணவர்களை சென்றடைந்தால் அவர்களின் பெற்றோரும் பின்பற்ற தொடங்குவார்கள்  என்றார்.  

மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, சூப்பர்மார்கெட் உள்ளிட்ட பெரிய கடைகளில்  அபராதத்துக்கு பயந்து துணிப்பை மற்றும் மக்கும் ரக பைகளை விலைக்கு கொடுக்கிறார்கள். பாலித்தீன் பை கொடுப்பதில்லை. இதனால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தே பை கொண்டு வர தொடங்கி இருக்கிறார்கள்.  

சிறுவியாபாரிகள் மற்றும் இதர வியாபாரிகளிடம் இருக்கும் பாலித்தீன் பைகளை ஒழிக்க தொடர்ந்து சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். வியாபாரிகள் பாலித்தீன் பைகள் இல்லையென்றால் மக்கள் சொந்த பைகளை எடுத்து வருவார்கள் என்றனர்.
Tags:    

Similar News