செய்திகள்
ஆற்றை கடக்க முயன்றபோது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட காரை படத்தில் காணலாம்.

காருடன் மழைவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி- காப்பாற்ற முயன்ற தந்தையும் தண்ணீரில் மூழ்கினார்

Published On 2020-10-24 04:27 GMT   |   Update On 2020-10-24 04:27 GMT
ஆற்றைக்கடக்க முயன்ற கார் மழைவெள்ளத்தில் சிக்கியது. சிறுமி காருடன் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டார். மகளை காப்பாற்ற முயன்ற தந்தையும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.
சித்தூர்:

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பூதலப்பட்டு மண்டலம் ஒன்டர்லாபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதாப் (வயது 45). இவரும், மனைவி சியாமளா (35), பிரதாப்பின் தம்பி சின்னப்பா (30), இவரின் மகள் சாய்சுனிதா (15) ஆகியோர் நேற்று முன்தினம் ஒரு காரில் பெனுமூர் மண்டலம் கலிகிரிகொண்டாவில் உள்ள உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக புறப்பட்டுச் சென்றனர். காரை, டிரைவர் கிரண்குமார் ஓட்டினார்.

அங்கு, திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு அவர்கள் அதே காரில் வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தனர். பெனுமூர் மண்டலம் நஞ்சூர்பள்ளி பஞ்சாயத்து கொண்டூர் கிராமம் அருகில் வந்தபோது, அங்குள்ள ஒரு ஆற்றை கடக்க முயன்றனர். அதில் மழைவெள்ளம் அதிகமாக ஓடியதால் கார் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.

காரில் பயணம் செய்த பிரதாப், மனைவி சியாமளா ஆகியோர் உயிர்தப்பினர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மகளை மீட்க முயன்ற சின்னப்பா தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். இருவரின் கதியும் என்னவென்று தெரியவில்லை.

தகவல் அறிந்த பெனுமூர் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து ஆற்றில் இறங்கி இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். சித்தூர் எம்.எல்.ஏ. சீனிவாசலுவும் தேடும் பணியில் ஈடுபட்டார். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அவர்கள் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Tags:    

Similar News