செய்திகள்
கொரோனா வைரஸ்

ஈரோடு மாவட்டத்தில் 5-வது நாளாக தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று

Published On 2021-09-11 06:01 GMT   |   Update On 2021-09-11 06:01 GMT
ஈரோடு மாவட்டம் முழுவதும் தற்போது 1,245 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோட்டில் கொரோனா 2-ம் அலையில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். நீண்ட நாட்களாக தினசரி பாதிப்பு ஆயிரத்துக்கு மேல் தொடர்ந்து இருந்து வந்தது. மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

குறிப்பாக கடைகளுக்கு நேர கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முக்கிய கடைவீதிகள் அனைத்தும் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டது. இது போன்ற தடுப்பு நடவடிக்கை காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறையத் தொடங்கியது.

இந்நிலையில் கடந்த 2 வாரமாக தொடர்ந்து தினசரி பாதிப்பு குறைந்து வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக திடீரென தினசரி பாதிப்பு உயர்ந்து வருகிறது. நேற்று 4-வது நாளாகவும் தினசரி பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு தினசரி பாதிப்பு 95 ஆக இருந்தது, அதன்பிறகு 115 ஆக உயர்ந்தது, அதன்பிறகு 117 ஆக உயர்ந்தது. நேற்று முன்தினம் 130 ஆக இருந்தது. இந்நிலையில் நேற்று 137 ஆக உயர்ந்துள்ளது.

இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 99 ஆயிரத்து 554 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 124 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 97 ஆயிரத்து 647 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 662 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் தற்போது 1,245 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 4 நாட்களாக திடீரென தினசரி பாதிப்பு உயர்ந்துள்ளதால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் சுகாதாரத்துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். குறிப்பாக மாவட்டத்தில் பொது இடங்களில் சமூக இடைவெளி கேள்விக்குறியாகி உள்ளது.

மக்கள் கூட்டம் கூட்டமாக கடை வீதிகளில் சென்று வருகின்றனர். பெரும்பாலான பொதுமக்கள் முககவசம் அணிந்து இருந்தாலும் அவற்றை முறையாக அணிவதில்லை. வாய், மூக்கு தெரியும்படி கழுத்துக்கு கீழ் அணிந்து செல்கின்றனர். அதிகாரிகளை பார்த்தவுடன் முககவசத்தை சரி செய்கின்றனர்.

இதேபோன்று குழந்தைகளை வெளியே அழைத்து செல்லும்போது முககவசம் அணியாமல் அழைத்து செல்கின்றனர். மேலும் ஈரோட்டில் இருந்து தினமும் திருப்பூர், சேலம், கரூர், கோவை போன்ற பகுதிகளுக்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலைக்கு சென்று வருகின்றனர்.

இவர்களும் முறையாக முககவசம் அணிவதில்லை. இன்னும் சிலர் 2 தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டு உள்ளோம். நமக்கு ஒன்றும் செய்யாது என்று அலட்சியமாகவும் உள்ளனர்.

இதுபோன்ற காரணங்களால் தற்போது தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மக்கள் இந்த வி‌ஷயத்தில் அலட்சியமாக இருக்காமல் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News