செய்திகள்
செங்கோட்டை அருகே உள்ள சிவநல்லூர் குளத்தில் தண்ணீர் மறுகால் செல்லும் காட்சி

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பரவலாக மழை- தென்காசி மாவட்டத்தில் 400 குளங்கள் நிரம்பின

Published On 2021-11-23 05:11 GMT   |   Update On 2021-11-23 05:11 GMT
அடவிநயினார் அணை நிரம்பி உள்ளதால் அதற்கு உட்பட்ட கரிசலகால், மேட்டுக்கால், பண்பொழி, வல்லாகுளம், கம்புளிகால் உள்ளிட்ட 14 அணைக்கட்டுகள் வழியாக 48 குளங்கள் நிரம்பி வழிகிறது.
நெல்லை:

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வந்தது. கடந்த ஒரு வாரமாக மழை குறைந்த நிலையில் நேற்று சில இடங்களில் லேசான மழை பெய்தது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இன்றும், நாளையும் (புதன்கிழமை) கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது.

இதனையொட்டி நேற்று இரவு முதலே ஒரு சில இடங்களில் கனமழையும், ஆங்காங்கே லேசான மழையும் பெய்தது. நெல்லை மாவட்டத்தில் சேரன்மகாதேவி பகுதியில் அதிகபட்சமாக 8 மில்லிமீட்டர் மழை பெய்தது. மணிமுத்தாறு அணை பகுதியில் 7.4 மில்லிமீட்டரும், அம்பையில் 5 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

தொடர்மழை காரணமாக மாவட்டத்தில் சுமார் 500 குளங்கள் வரை நிரம்பி விட்டன.பெரிய குளங்களான வடக்கு விஜயநாராயணம், மானூர் குளங்கள் நிரம்பி வழிகிறது. இதனால் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 138.55 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு 1013.89 கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1404 கனஅடி நீர் ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறில் 141.73 அடியும், மணிமுத்தாறில் 92.95 அடியும் நீர் இருப்பு உள்ளது. நம்பியாறு தனது முழு கொள்ளளவான 22.96 அடியை எட்டி நிரம்பி வழிகிறது. 52.25 அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணையில் 50 அடி நீர் இருப்பு உள்ளது.

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை விட்டு விட்டு மழை பெய்தது. அணை பகுதிகளில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக சிவகிரியில் 45 மில்லிமீட்டரும், கருப்பாநதி அணை பகுதியில் 37 மில்லிமீட்டரும் மழை பெய்தது. அடவிநயினாரில் 15 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

கடனா அணையில் 82.80 அடியும், ராமநதியில் 81.50 அடியும் நீர் இருப்பு உள்ளது. 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதியில் 68.24 அடிநீர் இருப்பு உள்ளது. மிகச்சிறிய அணையான 36 அடி கொண்ட குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வழிகிறது. அடவிநயினார் 3-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவில் இதமான காற்றுவீசியது. ஒருசில இடங்களில் இடி-மின்னல் தோன்றியது. ஆய்குடி, செங்கோட்டை, தென்காசி பகுதிகளிலும் மாலையில் விட்டு விட்டு லேசான மழை பெய்தது.

மாவட்டத்தில் சுமார் 466 குளங்கள் உள்ளன. இதில் 400 குளங்கள் வரை நிரம்பி விட்டன. குற்றாலம் அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் கொட்டி வருவதால் அதன்மூலம் பாசனம் பெறும் சுமார் 300-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி வழிகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் பிசான பருவ சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடவிநயினார் அணை நிரம்பி உள்ளதால் அதற்கு உட்பட்ட கரிசலகால், மேட்டுக்கால், பண்பொழி, வல்லாகுளம், கம்புளிகால் உள்ளிட்ட 14 அணைக்கட்டுகள் வழியாக 48 குளங்கள் நிரம்பி வழிகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை ஓட்டப்பிடாரம், மணியாச்சி, சாத்தான்குளம், கழுகுமலை, திருச்செதூர், காயல்பட்டினம், குலசேகரப்பட்டினம், ஸ்ரீவை குண்டம், கோவில்பட்டி, எட்டயபுரம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.

அதிகபட்சமாக கோவில்பட்டியில் 10 மில்லிமீட்டரும், ஸ்ரீவைகுண்டத்தில் 9.6 மில்லிமீட்டரும் மழை பெய்தது. கழுகுமழையில் 7 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.


Tags:    

Similar News