செய்திகள்
தசரா திருவிழாவையொட்டி உடன்குடியில் பல்வேறு சுவாமி வேடம் அணிந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா: முத்தாரம்மன் கோவிலில் நாளை சூரசம்ஹாரம் - பக்தர்கள் பங்கேற்க தடை

Published On 2021-10-14 14:02 GMT   |   Update On 2021-10-14 14:02 GMT
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் நாளை (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, விழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
குலசேகரன்பட்டினம்:

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி, கோவில் உள்பிரகாரத்தில் வலம் வந்து அருள்பாலிக்கின்றார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, முக்கிய விழா நாட்களிலும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதிக்கவில்லை. மற்ற நாட்களில் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் சாமி தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதிக்கின்றனர்.

தசரா திருவிழாவையொட்டி, ஒவ்வொரு ஊரிலும் விரதம் இருந்து காப்புக்கட்டி பல்வேறு சுவாமி வேடங்களை அணிந்த பக்தர்கள், அந்தந்த ஊர்களில் காணிக்கை வசூலித்து வருகின்றனர். தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு ஊர்களிலும் தசரா குழுவினர் வீதி, வீதியாக சென்று கலைநிகழ்ச்சி நடத்தி, காணிக்கை வசூலித்து வருவதால், தென் மாவட்டங்களில் தசரா திருவிழா களைகட்டியது.

தசரா திருவிழாவின் 8-ம் நாளான நேற்று இரவில் கமல வாகனத்தில் கஜலட்சுமி திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி, கோவில் உள்காரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

9-ம் திருநாளான இன்று (வியாழக்கிழமை) இரவு 8.30 மணியளவில் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி, கோவில் பிரகாரத்தில் வலம் வந்து அருள்பாலிக்கின்றார். இன்று காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 10-ம் திருநாளான நாளை (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில் கோவில் முன்பாக பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு நாளை இரவு 9.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து நள்ளிரவு 12 மணியளவில் கோவில் முன்பாக அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, மகிஷாசூரனை வதம் செய்கிறார்.

11-ம் திருநாளான நாளை மறுநாள் (சனிக்கிழமை) அதிகாலையில் சூரசம்ஹாரத்துக்கு பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 5 மணியளவில் அம்மன் கோவிலை வந்தடைந்தவுடன் காப்பு களைதல் நடைபெறும்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நாளை முதல் 12-ம் திருநாள் வரையிலும் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News