சிறப்புக் கட்டுரைகள்
ஸ்ரீகல்லு கட்டி சித்தர்

சென்னை சித்தர்கள்: ஓம் சற்குரு ஸ்ரீகல்லு கட்டி சித்தர்- காரனோடை

Published On 2022-01-22 09:29 GMT   |   Update On 2022-01-22 09:29 GMT
சென்னை காரனோடையில் மக்களோடு மக்களாக வாழ்ந்து அற்புதங்கள் பல செய்து சித்தி பெற்ற சிறப்பான மகான் இவர். எப்போதும் அவர் கழுத்தில் நிறைய கற்களை கட்டித் தொங்கவிட்டிருப்பார்.


சித்தர்கள் என்ன செய்கிறார்களோ அதுவே அவர்களது பெயராக மாறி நிலைத்துவிடும். அகத்தியர், திருமூலர், போகர், குதம்பை, கோரக்கர் என்று அந்த காலத்தில் வாழ்ந்த சித்தர்களின் பெயர்கள் எல்லாம் அவர்களது செயல்பாடுகளால்தான் தோன்றியது.

மூக்குப்பொடி சித்தர், தாடிக்கார சித்தர், தலையாட்டி சித்தர், மவுன சித்தர் என்று சமீப காலத்தில் வாழ்ந்த சித்தர்களும், அவர்களது செயல்பாடுகளாலேயேதான் அந்த பெயர்களால் அழைக்கப்பட்டனர். அந்த வரிசையில் ஸ்ரீசற்குரு கல்லுகட்டி சித்தரையும் சொல்லலாம்.

சென்னை காரனோடையில் மக்களோடு மக்களாக வாழ்ந்து அற்புதங்கள் பல செய்து சித்தி பெற்ற சிறப்பான மகான் இவர். எப்போதும் அவர் கழுத்தில் நிறைய கற்களை கட்டித் தொங்கவிட்டிருப்பார். 3 பேர் சேர்ந்து சுமக்க முடியாத கற்களை அவர் சாதாரணமாக மாலை போல போட்டுக்கொண்டு நடந்துகொண்டு இருப்பார்.

யாராவது, ஏதாவது பிரச்சினை என்று சொன்னால் தனது கழுத்தில் தொங்கிக் கொண்டு இருக்கும் கல்லை எடுத்து கொடுப்பார். கொண்டுபோய் வீட்டில் வை அல்லது தாயாரிடம் கொடு பிரச்சினை தீர்ந்துவிடும் என்று சொல்லுவார். அவர் சொன்னபடியே பிரச்சினைகள் தீர்ந்தன.

சில சமயங்களில் கண்ணீரோடு வருபவருக்கு தான் அமர்ந்திருக்கும் பகுதியில் கிடக்கும் கல்லை எடுத்து கொடுப்பார். ‘தூக்கி வீசு’ என்று சொல்வார். தொலைவது கல் மட்டுமல்ல, கர்மாவும் என்பது அவர் அருகில் இருந்து பார்த்தவர்களுக்கு மட்டுமே புரியும்.

கல் கிடைக்காவிட்டால், பிளாஸ்டிக் பொருட்கள், இரும்பு பொருட்கள் எது கிடைக்கிறதோ அதை கொடுத்து அருள் பாலிப்பார். பெரும்பாலும் அவர் கொடுக்கும் கற்கள் சக்திவாய்ந்ததாக மாறிவிடும். அதனால் அவரது பெயரும் கல்லு கட்டி சித்தர் என்று மாறியது.

உண்மையில் அவரது பெயர் பழனிசாமி என்பதாகும். நாமக்கல் அருகே உள்ள சீராப்பள்ளி, ஒத்தக்கடை என்ற கிராமத்தில் இவர் பிறந்தார். இவரது பெற்றோர் உள்ளிட்ட மற்ற விவரங்கள் எதுவும், யாருக்கும் தெரிய வில்லை. மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அவர் ஒரு காலக்கட்டத்தில் கிராமத்தில் இருந்து வெளியேறி பிழைப்புக்காக ஆந்திரா செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

விஜயவாடா அருகே சிறுக்கலூர் பேட்டை என்ற ஊரில் ஒரு ஓட்டலில் அவர் வேலைக்கு சேர்ந்தார். அங்கு அவரை ராஜாண்ணா என்றே மக்கள் அழைத்தனர். ஓட்டலுக்கு தண்ணீர் இரைத்து கொடுப்பது உள்ளிட்ட சிறு சிறு வேலைகளை செய்து வந்தார்.

அந்த ஊரில் வீர ஆஞ்சநேயர் ஆலயம் ஒன்று உள்ளது. அந்த ஆலயத்துக்கு வியாழக்கிழமை தோறும் பழனிசாமி சென்றுவிடுவார். அப்போது வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை மட்டுமே அணிந்திருப்பார். ஆஞ்சநேயர் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை.

ஆஞ்சநேயரை மிக மிக ஆத்மார்த்தமாக வழிபடுவார். இதன் காரணமாக அவருக்கு சித்தப் புரு‌ஷர்களுக்குரிய அனைத்து சக்திகளும் தாமாக கிடைத்ததாக நம்பப்படுகிறது. அந்த ஊரில் அவர் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தி காட்டினார். அதன் பிறகு அவர் அங்கிருந்து வெளியேறி ஊர் ஊராக அலைந்தார்.

2001-ம் ஆண்டு அவர் சென்னை புறநகர் பகுதிகளில் நடமாடினார். புழல், காவாங்கரை, சைக்கிள் ஷாப் ஆகிய இடங்களில் அவரை காண முடிந்தது. முதலில் அவரை எல்லோரும் யாசகம் எடுப்பவர் என்றே நினைத்தனர். அவரை யாருமே கண்டுகொள்ளவில்லை.

2003-ம் ஆண்டு காவாங்கரை கண்ணப்பசாமி ஆலயம் அருகே அவர் அமர்ந்திருந்தபோது சிலர் அவரிடம் டீ சாப்பிடுகிறீர்களா? என்று கேட்டு வாங்கிக் கொடுத்தனர். 2 நாள் கழித்து அவர்கள் சபரிமலைக்கு செல்ல புறப்பட்டனர். வழியில் இருந்த கல்லு கட்டி சித்தரிடம் சபரிமலைக்கு செல்வதாக சொன்னார்கள்.

அப்போது கல்லு கட்டி சித்தர் ‘இப்போது வேண்டாம்’ என்று மட்டும் கூறினார். ஆனால் புறப்பட்ட பிறகு நிற்கக்கூடாது என்ற எண்ணத்தில் கல்லு கட்டி சித்தர் கூறியதை அய்யப்ப பக்தர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. இருமுடி கட்டுவதற்காக கண்ணப்பர் கோவிலுக்கு சென்றனர்.

அந்த பகுதியில் ஒருவர் மரணமடைந்திருந்ததால் ஆலயம் மூடப்பட்டு இருந்தது. இருமுடி கட்ட முடியாத நிலை ஏற்பட்டது. சபரிமலை பயணமும் ஓரிரு நாட்கள் தள்ளிப்போனது. இந்த நிகழ்வுக்கு பிறகுதான் அந்த பகுதியில் உள்ளவர்கள் இவர் மிகப்பெரிய சித்தர் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தனர்.

அதன்பிறகு அவரை நாடி சென்று தங்களது குறைகளை சொல்லத் தொடங்கினார்கள். கல்லுகட்டி சித்தர் பார்வை எப்போதும் மிகவும் கூர்மையாக இருக்கும். அந்த கூர்மையான பார்வையே பாவங்களை தீர்க்கும் வகையில் இருப்பதாக சொல்வார்கள். பிரச்சினை என்று செல்பவர்களுக்கு அவர் கல்லை கொடுத்து ஆசிர்வதித்தபோது முதலில் வித்தியாசமாக பார்த்தனர்.

ஆனால் அந்த கல்லில் அவ்வளவு சக்தி இருப்பதை நாளடைவில் புரிந்துகொண்டனர். இதைத் தொடர்ந்து கல்லு கட்டி சித்தர் என்ற பெயர் பிரபலமானது. அவரை நாடி சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்தனர். ஆனால் கல்லு கட்டி சித்தரோ ஒரே இடத்தில் இருக்காமல் வேளச்சேரி, கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி, புழல், காவாங்கரை, காரனோடை, சோழவரம் என்று சுற்றிக் கொண்டே இருந்தார்.

அவர் நேரடியாக எந்த தகவலையும், யாருக்கும் தெரிவித்ததே கிடையாது. பெரும்பாலும் பரிபாஷையில்தான் அவரது பேச்சு இருக்கும். அவர் சொல்லும் தகவல்கள் கூட்டத்தில் இருக்கும் யாராவது ஒருவருக்கு நிச்சயமாக புரியும் வகையிலோ அல்லது ஆசி வழங்கும் வகையிலோ இருக்கும்.

பெரும்பாலும் கோணியை உடையாக சுற்றிக்கொண்டு இருப்பார். அல்லது பழைய லுங்கியை உடுத்தியிருப்பார். அவர் குளித்து யாருமே பார்த்தது கிடையாது என்றாலும் அவரை சுற்றி ஒருவித நறுமணம் கமழ்ந்துகொண்டே இருக்கும்.

அவரை யாராலும் கட்டுப்படுத்த இயலாது. யார் கட்டுப்பாட்டிலும் அவர் இருந்ததில்லை என்றாலும் புழல் காளித்தெரு பகுதியில் வசிக்கும் ஞானசேகர் என்பவரது வீட்டு வராண்டாவில் 2006-ம் ஆண்டு முதல் சுமார் 4 ஆண்டுகள் தங்கி இருந்தார்.

அந்த சமயங்களில் அவர் நடத்திய அற்புதங்கள் ஏராளம். சித்தர்கள் செய்யும் அத்தனை சித்தாடல்களையும் அவர் அந்த காலக்கட்டத்தில் நிகழ்த்தி காட்டினார். ஞான ஒளி அவரை சுற்றி வீசியது. காவாங்கரை கண்ணப்ப சித்தரின் ஆலயத்தில் சீரமைப்புப் பணிகளையும், மண்டப பணிகளையும் இவர் ஆசிர்வாதத்துடன் செய்து முடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு தடவை பவுர்ணமி தினத்தன்று திருவுடையம்மன், வடிவுடையம்மன், கொடியிடையம்மன் ஆகிய 3 அம்மன்களையும் தரிசனம் செய்வதற்கு ஒருவர் புறப்பட்டார். அவரை தடுத்து நிறுத்திய கல்லு கட்டி சித்தர், ஒரு பாட்டிலை உடைத்து 3 துண்டுகளாக எடுத்து அவற்றை சூரியனை நோக்கி காட்டி விட்டு வைத்தார். அந்த மூன்று துண்டுகளிலும் 3 அம்மன்களும் பிரதிபலித்ததைப் பார்த்து அனைவரும் அதிசயித்தனர்.

ஆனால் கல்லு கட்டி சித்தரோ எந்த பிரதி பலனையும் யாரிடமும் எதிர்பார்த்தது இல்லை. சாலையோரம் மனம் போன போக்கில் அலைந்து கொண்டே இருப்பார். சில சமயம் ஊருக்குள் வருவார். பழைய கடைகள் முன்பு படுத்துத் தூங்குவார். நிரந்தரமாக அவர் எங்குமே இருந்தது இல்லை.

என்றாலும் அவர் பார்வை பட்டால் நல்லது நடக்கும் என்று அவரை பார்த்தவர்கள் நம்பினார்கள். அவரைப் பார்த்ததும் மனதில் அமைதி வந்துவிடுவதை உணர்ந்தனர். இத்தகைய சிறப்புகளை ஓசையின்றி நிகழ்த்திய கல்லு கட்டி சித்தர் கடந்த 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி அவிட்டம் நட்சத்திர தினத்தன்று தனது ஆத்மாவை உடலில் இருந்து பிரித்துக்கொண்டார்.

அந்த சமயத்தில் அவர் புழல் ஞானசேகரனின் வீட்டில் இருந்தார். அவர் பரிபூரணமான தகவல் அறிந்ததும், அவரது அன்பர்கள் அவரை ஜீவ சமாதி செய்ய முடிவு செய்தனர். ஆட்டாந்தாங்கல் ஊர் தலைவராக திகழ்ந்த அசோகன் என்பவர் காரனோடை செட்டிநாடு குதிரை பண்ணை அருகில் உள்ள தனது இடத்தில் 10 சென்ட் இடத்தை கொடுத்தார். அங்கு கல்லு கட்டி சித்தர் ஜீவசமாதி செய்யப்பட்டார்.

அந்த இடத்தில் கல்லு கட்டி சித்தர் ஆலயம் கல்லாலயம் என்ற பெயரில் மிக பிரமாண்டமாக உருவாகி இருக்கிறது. ஜீவசமாதி மீது கல்லு கட்டி சித்தரின் சிலையை பிரதிஷ்டை செய்துள்ளனர். இந்த கல்லாலயத்தில் தினசரி வழிபாடுகளை சிறப்பாக நடத்துவதற்காக கல்லு கட்டி சித்தர் டிரஸ்ட் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் தினசரி பூஜைகள் நடந்து வருகின்றன.

தினமும் 3 நேரம் ஆரத்தி நடத்தப்படுகிறது. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. அந்த நாட்களில் பக்தர்கள் தங்கள் கையாலேயே கல்லு கட்டி சித்தருக்கு அபிஷேகம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் இரவு அங்கு தங்கவும் அனுமதி கொடுக்கிறார்கள்.

தினமும் மதியம் சுமார் 100 பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது. ஆண்டு தோறும் மாசி மாதம் அவிட்டம் நட்சத்திர தினத்தன்று அவரது மகாகுரு பூஜை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு மார்ச் 1-ந் தேதி 12-வது மகா குருபூஜைக்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள். அன்று காலை 7.30 மணிக்கு கோ பூஜையுடன் அபிஷேகம் செய்யப்படும். மதியம் 1 மணிக்கு மகா ஆரத்தி, நாம சங்கீர்த்தனம் செய்யப்படும்.

மாலை 6 மணிக்கு கல்லு கட்டி சித்தர் உற்சவ திருமேனி வீதிஉலா நடைபெறும். அந்த சமயத்தில் மகா சிவராத்திரியும் இணைந்தே வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆலயத்தில் தனசேகரன் என்பவர் பூஜை செய்து வருகிறார். மதுவுக்கு அடிமையாகி இருந்த அவரை கல்லு கட்டி சித்தர் கனவில் சென்று சில அற்புதங்கள் நிகழ்த்தி, தனது பக்தனாக மாற்றி கொண்டார் என்பது சமீபத்திய நிகழ்வாகும்.

கல்லு கட்டி சித்தரிடம் சீடராக இருந்த ராமகிருஷ்ணா அய்யா என்பவரது குரு பீடமும் செங்குன்றம் சக்திவேல் சுவாமிகள் ஐக்கியமும் அங்கு இருக்கிறது. இதனால் 3 மகான்களின் அருள் அலை இருக்கும் புண்ணிய இடமாக இது மாறியுள்ளது.

கல்லு கட்டி சித்தர் வாழ்ந்த காலத்தில் எத்தகைய அற்புதங்களை நிகழ்த்தினாரோ அதே அற்புதங்களை தற்போதும் நிகழ்த்தி வருகிறார். அவரது ஆலயத்துக்கு செல்லும் பக்தர்கள் கல்கட்டி தேவாய நமஹ, கல்லீச ராஜாய நமஹ, சர்வேச ரூபாய நமஹ, சற்குரு நாதாய நமஹ என்று சொல்லி வழிபட்டு பலன் பெறுகிறார்கள்.

கல்லு கட்டி சித்தர் ஆலயம் காரனோடை அருகில் ஓரக்காடு மேட்டுசூரப்பேட்டுக்கும், பள்ளர் சூரப்பேட்டுக்கும் நடுவில் அல்லிமேடு என்னும் பகுதியில் அமைந்துள்ளது. இந்த சித்தரின் சிறப்புகளை பரப்ப வாட்ஸ்அப் குழு ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். 89460 84551 என்ற எண் மூலம் தொடர்பு கொண்டு அந்த வாட்ஸ்அப் குழுவில் இணையலாம்.

Tags:    

Similar News