செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட கார் மற்றும் மதுபாட்டில்களை படத்தில் காணலாம்.

பல்லடம் அருகே காரில் கடத்திய 508 மதுபாட்டில்கள் பறிமுதல் - 2 பேர் கைது

Published On 2021-04-04 23:52 GMT   |   Update On 2021-04-04 23:52 GMT
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இந்த நிலையில் தேர்தலை முன்னிட்டு, நேற்று முதல் நாளை வரை 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
பல்லடம்:

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இந்த நிலையில் தேர்தலை முன்னிட்டு, நேற்று முதல் நாளை வரை 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், மதுபானங்களை, சட்டவிரோதமாக பதுக்கி வைத்து, அதிக விலையில் விற்பனை செய்கின்றனர். இந்த நிலையில் பல்லடம் சுற்றுவட்டார பகுதியில் சிலர் மதுபானங்களை மொத்தமாக வாங்கி அதிக விலையில் விற்பனை செய்வதற்காகவும், பல்லடம் - தாராபுரம் சாலையில் கார் மூலம் மதுபானங்கள் கடத்துவதாக அவினாசி மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து மதுவிலக்கு இன்ஸ்பெக்டர், முரளி, சப்-இன்ஸ்பெக்டர்கள், சர்வேஸ்வரன் கருப்புசாமி ஜெகதீஸ் உள்ளிட்ட போலீசார், அந்தப் பகுதியில் நேற்று அதிகாலை 2 மணிக்கு தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக ஒரு கார் ஒன்று வந்தது. அந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது அந்தக் காரில் மதுபானங்கள் 10 பெட்டிகளில், 480 மதுபான பாட்டில்கள் இருந்தன. இதையடுத்து அவர்களிடம் தீவிர விசாரணை செய்தபோது, திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நீதி அம்மன் நகரைச் சேர்ந்த ராமசாமி மகன் முருகேசன் (வயது 39), பல்லடம் தெற்கு பாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சுந்தர்ராஜ் (42), என்பதும், இவர்கள் இருவரும் மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பதற்காக, பல்லடம் - தாராபுரம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் மொத்தமாக வாங்கிச் செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து மதுபான பாட்டில்களையும், காரையும் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

திருப்பூர் 15 வேலம்பாளையம் 25 முக்கு பகுதியில் பறக்கும் படை அதிகாரி ராம்குமார் தலைமையிலான குழுவினர் நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாலிபரை பிடித்து சோதனை நடத்தினார்கள். அப்போது அவரிடம் அதிக அளவில் மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்த 28 மதுபாட்டில்களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவற்றை 15 வேலம்பாளையம் போலீசாரிடம் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர். வாலிபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் 15 வேலம்பாளையம் செட்டியார் வீதியைச் சேர்ந்த ஜெகன் (36) என்பது தெரியவந்தது. மேலும் தேர்தலை ஒட்டி 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் விடுமுறை என்பதால் சொந்த தேவைக்காக மதுபாட்டில்களை வாங்கிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News