செய்திகள்
வீட்டில் பீரோக்களில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடக்கும் காட்சி.

தனியார் நிறுவன மேலாளரை தாக்கி கத்திமுனையில் 14 பவுன் நகை கொள்ளை

Published On 2021-01-12 18:14 GMT   |   Update On 2021-01-12 18:14 GMT
தனியார் நிறுவன மேலாளர் வீட்டு் கதவை உடைத்து கத்திமுனையில் 14 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 35). தனியார் மருந்து நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். வாழப்பாடி தாலுகா அலுவலகம் அருகே இவரது தோட்டத்தில் புதிதாக வீடு கட்டி குடும்பத்தோடு வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கமான பணிகளை முடித்து விட்டு குடும்பத்தோடு தூங்கியுள்ளார். நள்ளிரவு ஒரு மணி அளவில் வீட்டுக்கதவை கல்லால் தாக்கி உள்ளே புகுந்த முகமூடி கொள்ளையர்கள் 5-க்கும் மேற்பட்டோர் கத்தி, அரிவாள், உருட்டுக்கட்டை போன்ற ஆயுதங்களால் சந்திரசேகரனை சரமாரியாக தாக்கினர்.

பின்னர் கத்திமுனையில் அவரது மனைவி கண்மணி (31), தாயார் ராஜாமணி ஆகியோர் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலி, பீரோக்களில் இருந்த நகைகள் உள்பட 14 பவுன் நகைகளையும், சந்திரசேகரனின் ஏ.டி.எம். கார்டு, கிரெடிட் கார்டு, செல்போன் ஆகியவற்றையும் பறித்து கொண்டு அங்கிருந்து அந்த கும்பல் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டது.

இரவு நேரத்தில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் வாழப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அன்பு, வாழப்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு வேலுமணி, வாழப்பாடி இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். முகமூடி கொள்ளையர்கள் குறித்து துப்பு துலக்க மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கொள்ளையர்கள் விட்டுச்சென்ற தடயங்களை சேகரித்தனர்.

இந்த துணிகர சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், முகமூடி அணிந்து வந்து கைவரிசை காட்டிய கொள்ளை கும்பலை வலைவீசி ேதடி வருகிறார்கள். வாழப்பாடி பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் நடந்த 2-வது கொள்ளை சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News