ஆன்மிகம்
நாகராஜா திடலுக்கு வந்த அய்யாவழி பக்தர்களை படத்தில் காணலாம்.

நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு வைகுண்டசாமி அவதார தின ஊர்வலம் இன்று நடக்கிறது

Published On 2021-03-04 03:09 GMT   |   Update On 2021-03-04 03:09 GMT
நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு வைகுண்டசாமி அவதார தின ஊர்வலம் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக நேற்று இரவு முதலே நாகராஜா திடலுக்கு அய்யாவழி பக்தர்களை வரத்தொடங்கினர்.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி ஜெயந்தி நாளான மாசி 20-ந்தேதியை அய்யாவழி மக்கள் அய்யா வைகுண்டரின் அவதார தினமாக கொண்டாடி வருகின்றனர்.

இதையொட்டி நேற்று இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திருமண மண்டபத்தில் மாசி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் திருச்செந்தூரில் இருந்து வாகன பேரணியாக வந்த பக்தர்கள் மற்றும் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து நடைபயணமாக ஊர்வலத்தில் கலந்து கொள்ள வந்த பக்தர்களும் கலந்து கொண்டனர்.

நேற்று பிற்பகல் 3 மணிக்கு சாமிதோப்பு தலைமைப்பதியின் முன்பு இருந்து ஆதலவிளை மாமலையில் மகா தீபம் ஏற்றுவதற்காக, மகாதீபம் கொண்டுசெல்லும் ஊர்வலம் நடைபெற்றது.

இந்த ஊர்வலத்துக்கு பையன் கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார். இந்த ஊர்வலம் பொற்றையடி, மயிலாடி வழியாக ஆதலவிளையில் உள்ள மலையை சென்றடைந்தது. பின்னர் அங்கு தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அய்யா வைகுண்டரின் அவதார தினமான இன்று (வியாழக்கிழமை) காலை நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு அவதார தின ஊர்வலம் தொடங்குகிறது.

அலங்கரிக்கப்பட்ட வாகனம் முன்செல்ல தொடர்ந்து முத்து குடைகளும், மேள தாளங்களும், பக்தர்களும் செல்கின்றனர். இந்த ஊர்வலத்திற்கு பாலபிரஜாபதி அடிகளார் தலைமை தாங்குகிறார். ஊர்வலம் இடலாக்குடி, சுசீந்திரம், வழுக்கம்பாறை, ஈத்தங்காடு, வடக்கு தாமரைகுளம் வழியாக சாமி தோப்பு தலைமைபதியில் முடிவடைகிறது.

ஊர்வலம் செல்லும் வழிகளில் அப்பகுதியில் உள்ளவர்கள் ஊர்வலத்திற்கு வரவேற்பு கொடுக்கின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில் கன்னியாகுமரி துணை சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன், தென்தாமரைகுளம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News