செய்திகள்
எக்ஸ்பிரஸ் ரெயில்

எழும்பூரில் இருந்து நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீண்டும் இயக்கம்

Published On 2019-12-05 04:19 GMT   |   Update On 2019-12-05 06:51 GMT
சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீண்டும் இயக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை:

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் 4-வது நடைமேடை தண்டவாள சீரமைப்பு பணி கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்தது. இதனால் எழும்பூரில் இருந்து நெல்லை செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் மற்றும் செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டன.

கடந்த அக்டோபர் மாதம் 10-ந்தேதியில் இருந்து வருகிற 8-ந்தேதி இந்த நடைமுறை தொடரும் என்று தெற்கு ரெயில்வே ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்தநிலையில், சீரமைப்பு பணிகள் முன்கூட்டியே முடிவடைந்ததால், 4-ந்தேதி (நேற்று) முதல் எழும்பூரில் இருந்து மீண்டும் பொதிகை, நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து நேற்று 2 எக்ஸ்பிரஸ் ரெயில்களும் புறப்பட்டு சென்றன. கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகள் நெருங்கும் வேளையில் மீண்டும் எழும்பூரில் இருந்து நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ‘வட சென்னை, மத்திய சென்னை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்களை எழும்பூரில் இருந்து பிடிப்பதுதான் சவுகரியமாக இருந்தது. இந்த ரெயில்கள் தாம்பரத்துக்கு மாற்றம் செய்யப்பட்டதால் மின்சார ரெயில்களிலும், மாநகர பஸ்கள், வாடகை கார், ஆட்டோக்கள் மூலமாக சென்று ரெயிலை பிடிப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது. இதனால் தேவையில்லாத அலைச்சல் ஏற்பட்டதோடு, நேரமும் விரயமானது. தற்போது மீண்டும் அந்த ரெயில்கள் எழும்பூரில் இருந்து இயக்கப்படுவதால் பெரும் நிம்மதி அடைந்துள்ளோம்’ என்றனர்.

Tags:    

Similar News