செய்திகள்
மந்திரி முருகேஷ் நிரானி

கர்நாடக அரசின் வருவாயை பெருக்க உதவுவேன்: புதிய மந்திரி முருகேஷ் நிரானி

Published On 2021-01-22 03:52 GMT   |   Update On 2021-01-22 03:52 GMT
கனிம சுரங்க தொழில்கள் மூலம் கர்நாடக அரசின் வருவாயை பெருக்க உதவுவேன் என்று புதிய மந்திரி முருகேஷ் நிரானி கூறினார்.
பெங்களூரு :

மந்திரி முருகேஷ் நிரானி, தனக்கு கனிம சுரங்கத்துறை ஒதுக்கப்பட்ட பிறகு முதல் முறையாக பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நான் இதற்கு முன்பு தொழில்துறை மந்திரியாக பணியாற்றினேன். 2 முறை சர்வதேச தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்திய அனுபவம் எனக்கு உள்ளது. இந்த அனுபவத்தை பயன்படுத்தி அரசுக்கு நற்பெயர் கிடைக்க நான் பாடுபடுவேன். கனிம சுரங்கத்துறையில் சிறப்பாக பணியாற்ற அதிக வாய்ப்புகள் உள்ளன. சட்டவிரோதமாக நடைபெறும் கனிம சுரங்க தொழில்களை தடுத்து சட்ட ரீதியிலான சுரங்க தொழில்கள் நடைபெறுவதை உறுதி செய்வேன். இதன் மூலம் அரசின் வருவாயை பெருக்க உதவுவேன்.

கர்நாடகத்தில் முதலில் சட்டவிரோத கனிம சுரங்க தொழிலை தடுக்க நடவடிக்கை எடுப்பேன். மத்தியில் சுரங்கத்துறை மந்திரியாக கர்நாடகத்தை சேர்ந்த பிரகலாத்ஜோஷி பணியாற்றுகிறார். இதனால் மத்திய அரசு கொண்டு வரும் சுரங்கம் தொடர்பான சட்டங்களை சரியான முறையில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கனிம சுரங்க தொழிலுக்கு இருக்கும் தடைகள் என்ன என்பதை பரிசீலிப்பேன்.

எனக்கு வழங்கப்பட்டுள்ள இலாகா முழு திருப்தி அளிக்கிறது. குறிப்பிட்ட துறை தான் ஒதுக்க வேண்டும் என்று முதல்-மந்திரியிடம் கோரிக்கை விடுக்கவில்லை. எனக்கு ஒதுக்கப்பட்ட துறையை திறம்பட நிர்வகிப்பேன். மந்திரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளை ஏற்று நல்ல முறையில் பணியாற்ற வேண்டும். அதிருப்தி தெரிவிப்பது சரியல்ல.

முதல்-மந்திரியின் கையை பலப்படுத்த நான் தீவிரமாக உழைப்பேன். ஏற்கனவே அதிகளவில் நேரம் விரயமாகிவிட்டது. அதனால் யாரும் அதிருப்தி தெரிவிக்காமல் மந்திரிகள் உடனடியாக தங்களின் பணியை தொடங்க வேண்டும். இலாகாக்களை மாற்றுவது என்பது இயல்பாக நடைபெறும் ஒன்று.

இவ்வாறு முருகேஷ் நிரானி கூறினார்.
Tags:    

Similar News