செய்திகள்
கோப்புபடம்

சென்னை மார்க்கெட் பகுதிகளில் கொரோனா பரிசோதனை - பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுகோள்

Published On 2021-08-01 05:28 GMT   |   Update On 2021-08-01 05:28 GMT
சென்னையில் மே 7-ந்தேதி முதல் ஜூலை 30-ந்தேதி வரை 23 லட்சத்து 86 ஆயிரத்து 986 ஆர்.டி. பி.சி.ஆர். பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் அதிக பரிசோதனைகள் மேற்கொண்டு தொற்று பாதித்த நபர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்துதல் அல்லது மருத்துவமனைகளில் அனுமதிப்பதன் மூலம் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது.


சென்னை மாநகராட்சியின் சார்பில் நாள்தோறும் சராசரியாக 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது சென்னையில் கொரோனா தொற்று பரவுதலை தடுக்க மாநகராட்சியின் சார்பில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகள், உதாரணமாக மார்க்கெட், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், அரசு அறிவித்துள்ள தளர்வுகளுக்கு உட்பட்டு இயங்கும் இதர அங்காடிகள் ஆகிய இடங்களில் பணிபுரியும் நபர்களுக்கு சுழற்சி முறையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதுவரை பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மே 7-ந்தேதி முதல் ஜூலை 30-ந்தேதி வரை 23 லட்சத்து 86 ஆயிரத்து 986 ஆர்.டி. பி.சி.ஆர். பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த மேற்குறிப்பிட்ட பரிசோதனைகளுக்கு மக்கள் தங்களது முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்...நடுரோட்டில் மனைவியை தாக்கி தாலி கயிற்றை அறுத்து கணவர் ரகளை

Tags:    

Similar News