செய்திகள்
கே.எஸ்.அழகிரி

காங்கிரசுக்கு துணைத்தலைவர் பதவி வழங்க வேண்டும்- மு.க.ஸ்டாலினிடம் கே.எஸ்.அழகிரி நேரில் கோரிக்கை

Published On 2021-10-19 08:20 GMT   |   Update On 2021-10-19 08:20 GMT
மாவட்ட பஞ்சாயத்து, ஒன்றியங்களில் காங்கிரசுக்கு துணைத்தலைவர் பதவி வழங்க வேண்டும் என மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கே.எஸ்.அழகிரி கோரிக்கை விடுத்தார்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிபெற்றது.

தேர்தலில் வெற்றிபெற்ற மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் நாளை (20-ந்தேதி) பதவி ஏற்கிறார்கள்.

மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் சேர்ந்து மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணைத் தலைவரையும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் சேர்ந்து ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவரையும் தேர்வு செய்வார்கள்.

இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் கடும் போட்டி நிலவுகிறது. வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கையின்படி பார்த்தால் அனைத்து பதவிகளையும் தி.மு.க.வே கைப்பற்றும்.

ஆனால் கூட்டணி என்ற அடிப்படையில் காங்கிரசுக்கு பதவிகள் வழங்க கேட்டு மாவட்ட அளவில் தி.மு.க. மாவட்ட செயலாளர்களிடம் பேசி வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, செல்வபெருந்தகை எம்.எல்.ஏ., கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நேற்று மாலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்கள். சுமார் அரை மணிநேரம் இந்த சந்திப்பு நடந்தது.

அப்போது திருநெல்வேலி மாவட்ட பஞ்சாயத்து தலைவர், களக்காடு, செங்கோட்டை உள்பட 8 ஒன்றிய தலைவர்கள் பதவி மற்றும் மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர், ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் பதவிகளை ஒதுக்கித்தரும்படி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் விரும்பும் இடங்களுக்கான பட்டியலையும் அப்போது வழங்கி உள்ளார்கள்.
Tags:    

Similar News