செய்திகள்
கரூர் பைபாஸ் சாலையில் அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்தபடம்.

திருச்சியில் இருந்து டெல்லி செல்ல முயன்ற அய்யாக்கண்ணு-150 விவசாயிகள் கைது

Published On 2021-07-20 11:30 GMT   |   Update On 2021-07-20 11:30 GMT
திருச்சி ரெயில் நிலையத்திற்கு விவசாயிகள் அனைவரும் பேரணியாக சென்று டெல்லிக்கு ரெயிலில் செல்ல பயணச் சீட்டு எடுக்க போவதாக அய்யாக்கண்ணு அறிவித்திருந்தார்.
திருச்சி:

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மாநில தலைவர் அய்யாக்கண்ணு கடந்த சில தினங்களுக்கு முன்பாக டெல்லிக்கு சென்று மேகதாது அணையை கட்ட கூடாது அதற்கு எதிராக டெல்லிக்கு சென்று போராட்டம் நடத்துவோம்.

மேலும் அதற்கு திருச்சி ரெயில் நிலையத்திற்கு விவசாயிகள் அனைவரும் பேரணியாக சென்று டெல்லிக்கு ரெயிலில் செல்ல பயணச் சீட்டு எடுக்க போவதாக அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று அய்யாக்கண்ணு தலைமையிலும் மாவட்ட தலைவர் மேகராஜன், செய்தி தொடர்பாளர் பிரேம் குமார் ஆகியோர் முன்னிலையில் காலை திருச்சி கரூர் பை-பாஸ் சாலையில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெற்றியில் நாமம் அணிந்து அரை நிர்வாண கோலத்துடன் ஏர் கலப்பையை கையில் பிடித்தவாறு திருச்சி ரெயில் நிலையத்திற்கு புறப்பட்டனர்.

அப்போது அங்கு எவ்வித அசாம்பித சம்பவங்களும் ஏற்படாமல் இருக்கும் வகையில் போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து போலீசார் விவசாயிகளை ரெயில் நிலையத்திற்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அய்யாக்கண்ணு தரப்பிலான விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக கரூர் பைபாஸ் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த திடீர் மறியலால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கரூர் பைபாஸ் சாலை பொதுமக்கள், வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்தது. இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை அப்புறப்படுத்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

தொடர்ந்து விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. தற்போது மேகதாதுவில் அணையை கட்டினால் தமிழக விவசாயிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். இது பற்றி தமிழக முதல்வருக்கு அதிகமான கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளது.

நான் எப்போதும் விவசாயிகள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பேன். இன்று எங்களுடைய சங்கத்தின் சார்பில் விவசாயிகள் டெல்லிக்கு சென்று மேகதாதுவில் அணையை கட்டக்கூடாது என்று பிரதமரை சந்தித்து மனு கொடுக்க உள்ளதாக அறிவித்து இருந்தேன்.

ஆனால் காவல்துறையினர் ஒவ்வொரு முறையும் என்னை டெல்லிக்கு செல்ல அனுமதிக்க மறுக்கிறார்கள். சுதந்திர நாட்டில் நான் டெல்லிக்கு செல்வது தவறா? விவசாயிகளின் உரிமை பறிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. ஆகவே அதிகாரிகள் அதை உணர்ந்து கொள்ள வேண்டும். 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். மேகதாதுவில் அணையை கர்நாடகா அரசு கட்டக்கூடாது. இது தான் எங்களின் முக்கிய கோரிக்கை.

இவ்வாறு அவர் கூறினார்.

அதன் பின்னர் விவசாயிகள் அனைவரும் மீண்டும் ஒன்று திரண்டு கோ‌ஷம் எழுப்பி கொண்டு ரெயில் நிலையத்திற்கு செல்ல முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை ரெயில் நிலையம் செல்ல விடாமல் தடுத்து 150-க்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்து உறையூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால் பரபரப்பான நிலை உருவானது.
Tags:    

Similar News